Sunday, July 24, 2016

எல்லாம் அய்யரு domination.....

சமீபத்தில் முகநூலில், நண்பர் வட்டத்தில் ஒருவர் பகிர்ந்த செய்தி - "சென்னை நகரத்தில் மயிலை, திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த பிராமணர்கள் ஒரு குழு உருவாக்கி அதில் அந்த சமூகம் சார்ந்த விஷயங்களையும், அவர்களையே கலாய்க்கும் மீம்ஸ்களையும் பதிவிடுகிறார்கள். இதனால் சாதி கட்டமைப்பு பலப்படுகிறது. தமிழகத்தில் மட்டும்தான் இது போன்ற ஆபத்துக்கள் கடைசி வரை ஆபத்தாகவே தெரிவதில்லை." இதை முதலில் பதிவிட்டவர் ஒரு பத்திரிக்கையாளர் வேறு. பின் பலரால் இந்த பதிவு பகிரப்பட்டது.

பிராமணர்களை திட்டியும், குறை சொல்லியும் நாட்டின் எல்லா பிரச்சனைகளுக்கும் முழு முதற் காரணம் அவர்கள்தான் என்று சொல்லும் இது போன்ற பல்வேறு பதிவுகளை பார்த்து விட்டேன். இதை பார்த்தவுடன் நான் சந்தித்த பிராமணர்களை பற்றி எண்ணிப் பார்த்தேன்.

கடந்த பத்து வருடங்களாக அமெரிக்காவில் நாலு ஊரில் வாழ்ந்து இருக்கிறேன். இந்த நான்கு ஊரிலும் உள்ள கோவில்களை நிர்வாகம் செய்வதும், தினம் பணிகள் செய்வதும் பெரும்பாலும் பிராமணர்கள்தான். தினமும் காலை அலுவலகப் பணி முடித்துவிட்டு பிறகு வந்து இந்த வேலையை செய்கிறார்கள். ஒவ்வொரு பண்டிகையையும், புனித நாட்களையும் சொந்த வீட்டுத் திருவிழா போல பார்த்து பார்த்து கொண்டாடுகிறார்கள். கோவிலை சுத்தம் செய்வது, பிரசாதம் சமைப்பது, விநியோகிப்பது, சாப்பிட்ட பிறகு இருக்கும் குப்பைகளை சுத்தம் செய்வது, விழா நேரத்தில் கூட்டத்தை சரி செய்வது என்று எல்லா வேலைகளையும் எந்த சங்கடமும் இல்லாமல் செய்கிறார்கள்.

இந்திய பண்பாடு, கலாச்சாரம், மயிரு, மட்டை என்று பேசும் மற்ற சாதிக்காரர்கள் யாரும் வேலை செய்ய தயாராக இல்லை. தீபாவளி என்றால் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று ஒரு கும்பிடு போட்டு விட்டு, தட்டில் பணம் போட்டு விட்டு, பொங்கலும் புளியோதரையும் சாப்பிட்டு விட்டு, "எல்லாம் அய்யரு domination" என்று நொட்டை சொல்ல மட்டும் நாம் அனைவரும் தயாராக இருப்போம். "ஒரே office வேலை", "குழந்தைகளை பார்த்துக்கவே நேரம் பத்தலை" என்று ஆயிரம் காரணம் சொல்வோம். நாம் பார்த்ததில் கோவில் வேலை செய்யும்  பிராமணர்களும் நல்ல பதவியில் இருப்பவர்கள். குடும்பஸ்த்தர்கள். அதையும் மீறித்தான் இந்த வேலை  செய்கிறார்கள். இந்த ஒரு சமூகம் மட்டும் இல்லையென்றால் அமெரிக்காவில் இந்த அளவு தமிழ் கோவில்களும், விழாக்களும் இருக்க வாய்ப்பே இல்லை. அதெல்லாம் தான் நமக்கு ஒரு பிரச்சனையே இல்லையே... நாம் வழக்கம் போல சொல்லுவோம் - "எல்லாம் அய்யரு domination"........

தமிழ் மொழி பற்றி பேச்சு எழும் பொழுது எல்லாம் "அய்யருங்கதான் தமிழ் விரோதிங்க. பாப்பான் ஹிந்தி மட்டும்தான் படிக்க சொல்லுவான்" என்று முக நூலில் எழுதுவார்கள். உண்மை நிலை என்ன? அமெரிக்காவில் பெரும்பாலும் தமிழ் வகுப்புகள் நடத்துவது பிராமணர்கள்தான். அவர்கள் குழந்தைகள் நன்றாக தமிழ் பேசுகிறார்கள். மற்ற சாதியினர் தங்கள் குழந்தைகளை அவர்களுடைய  வகுப்பிற்குத்தான் அனுப்புகிறார்கள் . "தமிழ் மொழி", "தமிழ் வாழ்க", "தமிழன்டா" என்று இணையத்தில் கூப்பாடு போடும் எத்தனை பேருக்கு தமிழ் இலக்கியம் தெரியும்.  இங்கு ப்ரபந்தமும், சிவபுராணமும், தேவாரமும், திருப்பாவையும், தமிழ் பாடல்களும்  கோவிலில் பாடுவது பிராமணர்களும் அவர்கள் குழந்தைகளும்தான் (கூடவே சமஸ்கிருத ஸ்லோகங்களுடன்).  மற்றவர்களிடம் கேட்டு பாருங்கள்."எனக்கு office வேலை முடிச்சுட்டு இந்த பாட்டெல்லாம் சொல்லி கொடுக்க எங்க நேரம்",  "அவங்களுக்கு பாடம் படிக்கவே time இல்லை" என்று ஏதாவது ஒரு காரணம் சொல்லுவோம். என்ன செய்வது?  "எல்லாம் அய்யரு domination"........

மற்ற சமயங்களிலாவது பரவாயில்லை. சாதி மோதல் நடக்கும் போதும், ஆணவக் கொலைகள் நடக்கும் போதும் நம் முக நூல் போராளிகள் பெரிதாக போடுவார்கள் - "பார்ப்பனீயம் பல் இளிக்கிறது". ஏண்டா? தேவரும் தலித்தும், வன்னியரும் தலித்தும், சில சமயம் தலித்துகளின் உள் பிரிவுகளும் கூட அடிச்சிகுட்டா சம்மந்தமே இல்லாம எதுக்குடா பாப்பான இழுக்குறீங்க? நான் பார்த்த வரை பிராமணர்கள் மட்டும்தான் சாதி மாறி திருமணம் செய்வது. தேவர் - பிராமணர், வன்னியர் - பிராமணர், நாயுடு - பிராமணர், தலித் - பிராமணர், வெள்ளை அமெரிக்கர் - பிராமணர், கருப்பு அமெரிக்கர் - பிராமணர், சீனர் - பிராமணர் என்று கிட்டத்தட்ட  எல்லா combinations-யும்  பார்த்து விட்டேன். இதெல்லாம் மற்ற சாதியில் முடியுமா? தன்னுடன் வேலை பார்க்கும் தலித் வீட்டு திருமணத்திற்கு சென்று விட்டு பந்தியில் உட்கார்ந்து சாப்பிடாமல் ("அவங்க கூடெல்லாம் உக்காந்து சாப்பிட்டா எனக்கு வாந்தி வந்துடும்"!!!!!) வந்த பிற சாதி மகான்களை எனக்கு தெரியும்.

இந்த சாதி கட்டமைப்பை மேல் சாதியினர் துணை கொண்டு அவர்கள் உருவாக்கி இருக்கலாம். ஆனால் இன்று அதை தாங்கி பிடிப்பது இடை நிலை சாதிகள் தான். தேவரும், வன்னியரும், நாயுடுவும், செட்டியாரும், இன்னும் பல இடை நிலை சாதிகள்தான். மாறும் காலத்திற்கு ஏற்ப, சாதி - மதம் - நாடு மாறி திருமணம் செய்வது பிராமணர்கள்தான். அதை பற்றி பேச நமக்கு எங்க நேரம்?  "எல்லாம் அய்யரு domination"........

அவர்கள் மேல் சொல்லப்படும் அடுத்த குற்றச்சாட்டு "பாப்பானுங்க எப்பவுமே ஒரு கும்பலா சேந்துப்பாங்கே..." இது என்னடா அநியாயமா இருக்கு... சில வருடங்களுக்கு முன்னாள் ஒரு நாடக குழுவுடன் பணியாற்ற வாய்ப்பு  கிடைத்தது. கிட்டத்தட்ட 25 நடிகர் கொண்ட குழுவில் என்னையும் சேர்த்து 2 பேர் வேறு சமூகத்தவர் (இதில் ஒரு ironic-ஆன விஷயம்: அந்த நாடகத்தில் வரும் ஒரே ஒரு பிராமண கதாபாத்திரமான கல்யாண புரோகிதர் வேடத்தை எனக்கு கொடுத்தார்கள்.). எங்களை எந்த  விதத்திலும் அவர்கள் மாறுபடுத்தி நடத்தவில்லை. எனக்கு உடை கொண்டு வந்து கொடுத்தவர் ஒரு ஐயர் பெண். நாடகம் முடிந்தவுடன் "துவைத்து தருகிறேன்" என்றேன். "அதனால என்ன.... நானே துவைச்சுக்கிறேன்" என்று வாங்கி கொண்டார். என் வீட்டுக்காரம்மாவிடம் கூட இதை எதிர் பார்க்க முடியாது. இதில் எங்கிருந்து அவர்கள் பாகுபாடு பார்த்தார்கள் என்று எனக்கு புரியவே இல்லை.

ஆனால், எந்த ஊர் சென்றாலும் அவர்கள் நண்பர்களாகி விடுவதையும் பார்க்கிறேன். ஆனால், இதில் என்ன தவறு  என்றுதான் எனக்கு புரியவில்லை. தனித்த கலாச்சாரமும், உணவு முறையும், பூஜை முறைகளும், சற்றே  மாறுபட்ட  தனித்த மொழியும் உடைய இனக் குழுக்கள் இப்படி ஒன்றாவது இயல்பானது. சௌராஷ்ட்ரா மக்களிடமும் இதை காணலாம்.  பிராமணர்களை மட்டும் இதில் ஏன் குறை சொல்கிறார்கள்?

இதெல்லாம் தாண்டி பிராமணர்கள் மீது எனக்கு ஒரு வருத்தம் உண்டு. "நீங்க எந்த சாதி?" என்று மிக இயல்பாக கேட்பார்கள் (இது பிற சமூகத்தில் வயதானவர்களிடம் பார்க்கலாம். ஆனால், பிராமண சமூகத்தில் இளைஞர்களிடம் கூட பார்த்திருக்கிறேன்). என்னையும் கூட ஒருவர் கேட்டார். நான் பதில் சொன்ன முன்பும் பின்பும் அவர் என்னிடம் நடந்து கொண்ட முறையில் எந்த மாற்றமும் இல்லை. இதை பல பிராமணர்களிடம் பார்த்து விட்டேன். சாதியை அறிந்து கொள்வதில் ஒரு ஆவல் இருக்கிறது. அந்த கேள்வியின் பதிலால் அவர்கள் குணம் மாறாமல் இருந்தாலும், அந்த கேள்விக்கு பின்னால் இருக்கும் சமூக அவலத்தையும், அரசியலையும் அவர்கள் உணர்வார்களா?

ஆக, நான் பார்த்தவரையில், அந்த இனம் தன் இயல்பு மாறாமல் வாழ்கிறது. கல்வியில் மிகுந்த ஆர்வத்துடன் படிக்கிறது. புது தொழில்கள் செய்கிறது. வாழ்வில் அடுத்த கட்ட முன்னேற்றத்தை மட்டுமே சிந்தித்து செயல்படுகிறது. நல்ல இசையை கற்கிறது. கலையை இரசிக்கிறது. தமிழ்  கற்கிறது. உலகின் எந்த பகுதிக்கு போனாலும் தன் வாழ்க்கை முறையை கூட்டி செல்கிறது. காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றி கொண்டு தன்னை செழுமை படுத்தி கொள்கிறது. வாழ்க்கையை கொண்டாடுகிறது....

அடடா... படிப்பவர் யாரவது "பாப்பான்  கால நக்குறான்...", "அடி வருடி" என்று சொல்லி விட்டால் என்ன செய்வது? "ஊரோடு ஒத்து வாழ" முடியாதே? என்ன செய்வது... அப்படி ஒரு நிலை வந்தால், ஒன்றும் பிரச்சனை இல்லை. மற்றவரை விட இன்னும் சத்தமாக சொல்லி விடுவேன்:

"எல்லாம் அய்யரு domination" :-) :-) :-)

பின் குறிப்பு: இந்த பதிவில், வேண்டுமென்றே இட ஒதுக்கீடு பிரச்சனை பற்றி எழுதவில்லை. அது பிராமணர்கள் மட்டும் அல்ல, பல இடை நிலை சாதிகள் பற்றியும் எழுத வேண்டும். அதனால், அதை பற்றி ஒரு தனி  பதிவை எழுதுவேன். 

No comments: