Thursday, September 09, 2010

உள்ளங்கைய விட பெரிய வடை

'குன்றாடு கொழுமுகில்போல் குவளைகள்போல் குரைகடல்போல்
நின்றாடு கணமயில்போல் நிறமுடைய நெடுமாலூர்
குன்றூடு பொழில்நுழைந்து கொடியிடையார் முலையணவி
மன்றூடு தென்றல் உலாம் மதிளரங்கமென்பதுவே.'
- பெரியாழ்வார்
நாலாயிர திவ்ய பிரபந்தம் (410)

இந்த பாட்டோட சுமாரான அர்த்தம்:

"மலைகளை கடந்து செல்லும் கரிய மேகத்தின் நிறம் போல, கருநீல குவளை மலரின் நிறம் போல, சத்தமிடும் கடல் போல, ஆடும் மயில் போல நிறமுடைய இறைவன். மலைகளையும், தோட்டங்களையும், மெல்லிய இடையுடைய மங்கையரின் மார்புகளையும் தாண்டி வரும் தென்றல், மதில்களும் அரங்குகளும் உள்ள திருவரங்கத்தை சுற்றி வீசும். அந்த ஊரில்தான் குடி கொண்டு இருக்கிறான்" ன்னு ஸ்ரீரங்கத்த பத்தி பெரியாழ்வார் பாடுறார்.

எனக்கு ரொம்ப பிடிச்ச இடத்துல ஒண்ணு, ஸ்ரீரங்கம். இப்போ யோசிச்சு பார்த்தா, நினைவு தெரிஞ்சதுக்கு அப்புறம், ஸ்ரீரங்கம் எனக்கு நல்ல மனசுல பதிஞ்சது, மறைந்த எழுத்தாளர் சுஜாதாவோட, 'ஸ்ரீரங்கத்து தேவதைகள்' புத்தகத்தில்தான். மார்கழி மாசத்து குளிர்ல பஜனை பண்ற சனங்க, வார கடைசியில நாடகம் போடுற பசங்க, தொண்ணூறு வயசிலையும் ஊர விட்டு போகாத கணக்கு வாத்தியார் - இப்பிடி ஒவ்வொருத்தரையும் நேர்ல பாக்காட்டியும், மனசுக்குள்ள பழகின சந்தோசத்த தந்த புத்தகம் அது. அந்த புத்தகத்தை படிச்சதுக்கு அப்புறம்தான் உண்மையிலேயே ஆசைப்பட்டு ஸ்ரீரங்கம் போக ஆரம்பிச்சேன். கொஞ்ச வருஷம் முன்னாடி வரைக்கும் பழமை மாறாம ரொம்ப அழகா இருந்த ஊர்.

போன தடவை போனப்போ, யாரோ ஒரு புண்ணியவான் மதில் சுவர ஒட்டியே கடை கட்டிக்கிட்டு இருந்தார். இப்படியொரு கோவில், அமெரிக்காவுல இருந்தா, பக்கத்துல குழி தோண்ட கூட விட மாட்டாங்க. தலையில தூக்கி வெச்சு கொண்டாடுவாங்க. பாவம். ரெங்கநாதர் தெரியாம, நம்ம ஊருல உக்காந்துட்டார். இனி கோவில காப்பாத்த, தசாவதாரம் படம் மாதிரி, அந்த ரங்கநாதரே வெளிய வந்து ஏதாவது செஞ்சாத்தான் முடியும். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர், மத்த கோவில் சாமி மாதிரி இல்ல. 'என்ன வாத்தியாரே? நல்லா இருக்கீங்களா?"ன்னு கேட்க தோணும். அந்த அளவு மனசுக்கு நெருக்கமாயிடுவார். மத்த இடத்துல, இவர கொஞ்சம் தள்ளி நின்னுதான் பாக்க முடியும். ஸ்ரீரங்கத்துல நல்லா பக்கத்துல நின்னு, ஒய்யாரமா படுத்து இருக்கற அவர ரசிக்கலாம். சாமியே இப்படின்னா அவர தூக்கிட்டு பறக்குறவர் எப்பிடி? முன்னாடி போய் நின்னா, 'நீயெல்லாம் ஜுஜுபி'ன்னு சொல்ற மாதிரி உருவத்துல இருப்பார் கருடர். அவர் முன்னாடி கூட்டம் நின்னு, நான் பார்த்ததே இல்ல. மண்டபத்தோட எந்த மூலையில நின்னாலும், முழுசா தெரிவார். இதுக்கும் மேல, இந்த கோவில்ல எனக்கு பிடிச்ச விஷயம், வருஷா வருஷம், இங்க வந்து குலதெய்வத்த கும்பிடற கிராமத்து சனங்க.

அவங்களுக்கு இந்த கோவில் தூண்ல இருக்குற சிலைங்கதான் குல தெய்வம். அதனால, வருசத்துக்கு ஒரு தடவை இங்க வந்து படையல் போடுவாங்க. ஒரு முழு பலா பழத்த வெட்டி, அதுல தேன், வெல்லம் இப்பிடி எல்லாத்தையும் கலந்து, பஞ்சாமிர்தம் செஞ்சு எல்லாருக்கும் கொடுப்பாங்க. ஒரு தடவ நான் எல்லாம் தூண் கிட்டயும் போய் பஞ்சாமிர்தம் வாங்கி சாப்பிட்டேன். மறக்க முடியாத ருசி. "A Well fed man is a Happy Man" ன்னு சொல்லுவாங்க. சமையல்ல அய்யங்கார் சமையலுக்கு தனி ருசி. என்னதான் மத்தவங்க முயற்சி பண்ணாலும், புளியோதரை பொங்கல்ன்னு சொன்னா, அது அய்யங்கார் சமையல்ல சாப்பிட்டா, அதோட ருசியே ருசி. ஆனா, ஸ்ரீரங்கத்துல மட்டும், ரெங்கநாதர் கோவில் பிரசாதத்த விட திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் பிரசாதம் கூடுதல் ருசி. நெய்யோழுக பொங்கலும், மணக்க மணக்க புளியோதரையும் கொடுப்பாங்க. அதுவும் அந்த கோவில் வடை இருக்கே, என் உள்ளங்கைய விட பெரிய வடை. சின்ன வயசுல, அத வாங்கிகிட்டு, கோவில் வாசப்படில இருக்குற யானை சிலை மேல உக்காந்து சாப்பிட்ட ஞாபகம்.

ஆக, பெரியாழ்வாருக்கு ஸ்ரீரங்கம்ன்னு சொன்னா, மலை - மேகம் - மயில்ன்னு இப்பிடி நினைவு வருது. எனக்கு பலா பழ பஞ்சாமிர்தம், புளியோதரை, பொங்கல், வடைன்னு நினைவு வருது. இந்த தடவை இந்தியா போறப்ப, மறக்காம ரெங்கநாதரையும் ஜம்புகேஸ்வரரையும் பாக்கணும். அதுக்கு ரெங்கநாதர் மனசு வெக்கணும்.

1 comment:

The Invincible said...

Kandippa manasu vaipar... Kavalai padathey...