Saturday, January 16, 2010

என்னை பாதித்த மனிதர்கள் - I

உடல் என்னும் உருவ அமைப்பை நீக்கி விட்டால், மனிதன் என்பவன் வெறும் அனுபவப் பதிவுகளே. நாம் பழகும் ஒவ்வொரு மனிதரும் நம் மனதில் ஒரு அனுபவத்தை விட்டு செல்கிறார்கள். தெரிந்தோ தெரியாமலோ நம் வாழ்க்கை பாதையை மாற்றி விடுகிறார்கள். அவர்கள் நம் வாழ்கையை விட்டு வெகு தூரம் சென்ற பின்னர் கூட, இரவில் எங்கிருந்தோ கேட்கும் சில் வண்டின் ஒலியை போலவே, நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களிலும் எதிரொலிக்கப் படுகிறார்கள். நம் வாழ்கையை யோசித்து பார்த்தால், அவ்வாறு பலர் நம் மனதில் தோன்றுவார்கள். பலருக்கு நன்றி சொல்ல தோன்றும்.

உண்டு முடித்த மாடு, ஓரமாக அமர்ந்து உள்ளிருக்கும் உணவை வெளியே கொண்டு வந்து அசை போடுவதை போல, நானும் என் வாழ்கையை அசை போட்டால், நான்கு மனிதர்கள் என் மனதில் 'பளிச்'சிடுகிறார்கள்:
1 திரு.ஞானம் சார். பத்தாவது வரை என் பள்ளிகூடத்தின் தலைமை ஆசிரியர்
2 திரு.முத்து குமார சாமி சார். என் இயற்பியல் ஆசிரியர்
3 திரு.சதாசிவம் சார். என் கணக்கு ஆசிரியர்
4 திரு.பிரபாகரன் சார். என் வேதியியல் ஆசிரியர்

இன்று நான் நானாக இருப்பதற்கு இவர்கள் காரணம். செய்யும் வேலையை புரிந்து செய்வது, இரசித்து செய்வது, காதலோடு செய்வது எப்படி என்று எனக்கு உணர்த்தியவர்கள் இவர்கள். இவை அனைத்தையும் இவர்கள் எனக்கு அறிவுரையாக கூறவில்லை. உட்கார வைத்து பாடம் நடத்த வில்லை. இவை அனைத்தையும் தங்கள் வாழ்கையாக வாழ்ந்து காட்டினார்கள். அப்படி வாழ்வதன் அர்த்தத்தையும், அந்த வாழ்கையின் பெருமிதத்தையும், அதில் கிடைக்கும் நிம்மதியையும் என் போன்ற மாணவர்களின் கண்களில் காட்டினார்கள். இன்று நான் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அவர்கள் வாழ்க்கை இருப்பதை உணர்கிறேன். தினமும் எங்கு சென்றாலும் தவறாமல் மறக்காமல் 'பேனா' எடுத்து செல்கிறேன். ஒவ்வொரு முறையும், 'studentன்னா எப்பவுமே கையிலே ஒரு பேனா இருக்கணும். ஒரு நல்ல விசயத்த எப்போ வேணாலும் நீ கத்துக்கலாம். அப்ப அத மறக்காம இருக்க எழுதி வெச்சுக்க நிச்சயம்மா ஒரு பேனா எப்பவுமே கையிலே இருக்கணும்' என்று திரு.முத்து குமார சாமி சார் சொன்னது என் நினைவுக்கு வருகிறது. இந்த பதிவில் திரு.ஞானம் சார் அவர்களை பற்றி......

'நிழலின் அருமை வெயிலில் தெரியும்' என்பார்கள். இவரிடம் படித்த காலத்தில், இவரின் அருமை எனக்கு தெரியவில்லை. வேலைக்கு வந்த பிறகு, மற்ற நண்பர்களின் பள்ளிகூட வாழ்கையை பற்றி கேட்ட பிறகு தெரிந்தது. பழனி மாதிரியான சின்ன ஊரில், எந்த விதமான உபரி தொகையும் வாங்காமல், எங்களுக்கு பாட்டு, ஓவியம், மிருதங்கம், ட்ரம்ஸ், சதுரங்கம், பளு தூக்குதல், பேச்சு போட்டி, விளையாட்டு, ஹார்மோனியம் என்று எல்லா துறைகளிலும் எங்களை ஊக்குவித்தவர். வருடத்தில் மூன்று நாள் ஒதுக்கி எங்களக்கு Phonetics என்று சொல்லப்படும் ஆங்கில உச்சரிப்புகளை கற்று கொள்ள வசதி செய்து கொடுத்தார். எந்த விளையாட்டிலும் பரிசு வாங்காமல் தனியே இருந்த என்னை ஊக்குவித்து, தமிழ் பேச்சு போட்டிகளில் பங்கு கொள்ள வைத்தார்.

சம்பாதிக்க வேண்டும் என்று மட்டும் நினைத்திருந்தால் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதித்து இருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. ஐந்தாம் வகுப்பில் 40 பேருடன் ஆரம்பித்த வகுப்பு, பத்தாம் வகுப்பில் வெறும் 16 பேரில் நின்றது. அப்பொழுதுதான் ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பட்ட கவனம் செலுத்த இயலும் என்று இவ்வாறு செய்தார். பத்தாம் வகுப்பில், பல மாதங்கள் எங்களை இரவு பள்ளியிலேயே தங்கி படிக்க வைத்தார். காலையில் ஐந்து மணிக்கு அவரே வந்து எங்களை எழுப்பி விட்டு, எங்களுக்கு குடிக்க ஏதாவது கொடுத்து பிறகு படிக்க வைத்தார். இது எதற்குமே அவர் பணம் வாங்க வில்லை. அப்பொழுது, நான் காலையில் எழுத்தால் கண்களை திறக்காமல் சுவாமி படத்திற்கு முன் சென்று நின்றுதான் கண்களை திறப்பேன். சலிக்காமல், தினமும் என்னை சுவாமி படத்திற்கு முன் கூடி செல்வார். அவருக்கு என்று தனிப்பட்ட சொந்த வாழ்க்கை என்று ஒன்று இருந்ததா? என்று கூட எனக்கு சந்தேகமாக இருக்கிறது. சதா மாணவர்களை பற்றிய நினைவு மட்டுமே...

கிட்டதட்ட பத்து வருடங்கள் கழித்து அவரை காண சென்றேன். பள்ளிக்கூடம் ஓரளவு மாறி இருந்தது. ஆனால், ஞானம் சார் மட்டும், கொஞ்சம் வயதாகி இருந்தாலும், அன்று பார்த்தது போலவே, இன்றும் ஒரு வெள்ளை சட்டை, சாம்பல் நிற பேண்டு, கையில் ஒரு Wren and Martin புத்தகம். என்னோடு பேசும் பொழுதும், அமெரிக்காவில் எப்படி பாடம் நடத்துகிறார்கள்? அதில் நல்லவற்றை தனது பள்ளியில் நடைமுறை படுத்த இயலுமா என்றுதான் பேசினார். கொஞ்சமும் மாறவில்லை.

அந்த பள்ளியில், நான் ஐந்தாம் வகுப்பு சேர்ந்த பொழுது 5000 ரூபாய் deposit கட்டி இருந்தேன். ஆறு வருடங்கள் கழித்து பத்தாம் வகுப்பு முடிந்து பள்ளியை விட்டு வெளியேற Transfer Certificate வாங்க வந்தேன். என் அப்பாவும் என்னுடன் வந்திருந்தார். பத்தாம் வகுப்பில் நான் 987 மதிப்பெண் எடுத்தேன். 800-850 மட்டுமே எடுப்பேன் என்று நினைத்திருந்த மகன் அதிக மதிப்பெண் எடுத்த சந்தோஷத்தில், என் அப்பா அந்த பணத்தை கேட்க வேண்டாம் என்று முடிவு செய்து விட்டார். சான்றிதழை வாங்கி கொண்டு நாங்கள் இருவரும் எங்கள் வண்டியை எடுக்க வந்தோம். 'சார்... ஒரு நிமிஷம்..' என்று குரல் கேட்டது. ஞானம் சார் அந்த 5000 ரூபாய்க்கான காசோலையுடன் வந்தார். 'மறந்துடீங்க போல.....' என்று என் அப்பாவிடம் கொடுத்தார். 'அதனால என்ன சார்.. பரவால்ல.. எனக்கு வேண்டாம்' என்றார் அப்பா. 'ஐய்யய்யோ... இந்தாங்க சார்.. புடிங்க' என்று அப்பாவிடம் காசோலையை கொடுத்து விட்டு சென்றார். அதுதான் ஞானம் சார்.....

No comments: