Friday, July 24, 2009

ஏரோபிளேன் பறக்குது பார் மேலே

‘ஏரோபிளேன் பறக்குது பார் மேலே
அதையும் தாண்டி மின்னல் போல கீழே
கல்லிருந்தா நாய காணோம் - நாயிருந்தா
கல்ல காணோம்… ‘

எங்காவது பஸ்ஸில் ஊருக்கு போகும் போது இந்த தத்துவ பாட்டை கேட்டு இருப்பீர்கள். ‘பாறை’ என்ற ஒரு மொக்கை படத்தில் வந்த ஒரு தத்துவ பாடல். நினைவிருக்கிறதா? இந்த பாடலை கேட்டால் உங்களுக்கு என்ன தோன்றும்? எனக்கு இந்த பாடலை நினைத்தாலே, காதின் ஓரம் ‘ங்கொய்யய்ய்ய்…’ என்று ஒரு சத்தம் கேட்கும். ஏனென்று தெரிய வேண்டுமென்றால், அதற்கு முன்னால், தமிழ்நாட்டின் தொன்று தொட்ட பழக்கம் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும்.

அதாகபட்டது, நம் தமிழ் சகோதரர் அனைவரிடமும் இருக்கும் ஒரு நல்ல (!!!!) பழக்கம் என்னவென்றால், போகும் வழியில் ஒரு கோவிலோ, சுவாமி சிலையோ இருந்தால் - அப்படி ஒரு கணம் கண்ணை மூடி ’salute’ போட்டு விட்டு போவார்கள். வண்டி ஓடும் போது கூட… பயலுக எப்ப கை எடுக்கறாங்க… எப்போ கும்பிடராங்கன்னு கண்டுப்புடிக்கவே முடியாது. அவ்வளவு நேக்கா பண்ணுவாங்க. அப்படிப்பட்ட தமிழ் சமூகத்தில், நூறு கோடியிலே ஒரு ஆளாவும், ஆறு கோடியிலே முதல் ஆளாகவும் இல்லாம போனாலும், கடைசி ஆளா இருக்குற நானும் இந்த பாரம்பரியத்தே காப்பாத்திட்டு வரேன். அதனால்தான் எனக்கு இந்த ‘ங்கொய்யய்ய்ய்…’. எப்புடின்னா…

இது நடந்து ஒரு ஆறு வருஷம் இருக்கும். அப்போ நான், எங்க காலேஜுல ரெண்டாவது வருஷம். மொத மொதல்ல, எனக்கு சம்பளம்முன்னு ஒரு கம்பெனில, internshipனு சொல்லி, 10000 பணம் கொடுத்தாங்க. நாங்கெல்லாம் சும்மாவே சாமியாடுவோம். இதுல, உடுக்கையையும் அடிச்சா.. கேக்கணுமா??? என் நண்பன் சரவணன கூட்டிகிட்டு, என்னோட வண்டியில தண்ணியடிக்க போனோம். அத வண்டின்னு சொன்னா, வண்டிங்க எல்லாம் கட்டை எடுத்து அடிக்கும். பெரிய வண்டி வாங்கி கொடுத்த புள்ள கெட்டுடுவான்னு, எங்க நைனா வாங்கி கொடுத்த TVS 50. அது ‘move’ஆகரத பாத்தா மட்டும்தான் அதை வண்டின்னு சொல்ல முடியும். மத்தபடி, வண்டிக்கு உரிய light, brake - இது மாதிரி சமாச்சாரத்த என் வண்டியில எதிர் பார்க்க கூடாது.

நண்பன் தண்ணி அடிக்க மாட்டான். ‘Side Dish’ மட்டும் சாப்பிடும் நல்லவன். அப்படி போறப்பத்தான், இந்த பாட பாடினோம். கடைக்கு உள்ளார போய் எல்லா கருமத்தையும் கலந்து அடிச்சேன். நண்பன் கேட்டதுக்கு ‘ தனியா அடிச்சா சித்தெறும்பு சீண்டுன மாதிரி இருக்கும்… கலந்து அடிச்சாதான் கட்டெறும்பு நோண்டுனா மாதிரி இருக்கும்”னு dialogue வேற.. (எல்லாம் ‘தமிழ்’னு ஒரு படம் பார்த்தால வந்த வினை)… ஆனா, அப்ப தெரியாது. போறப்போ என்னய ‘சித்தெறும்பாவது, கட்டெறும்பாவது - ஒரு யானையே மிதிக்க போகுதுன்னு’.

வீட்டுக்கு கிளம்பறப்போ, நண்பன் ‘ டேய்.. நீ குடிச்சிருக்கே. வண்டி ஓட்ட முடியாது. அதனால நான் ஓட்டுறேன்’னு சொன்னான். பாவிகளா! தண்ணி அடிச்சவன் கிட்ட இப்பிடியா பேசுறது. ‘மச்சி! என்ன குடிச்சாலும் நான் ’steady’யா ஓட்டுவேன். வாடா!’னு நானே ஓட்டுனேன். கண்ணெல்லாம் சொக்குது…. இருந்தாலும் ஓட்டுனேன். அப்பத்தான்…

நம்ம திருப்பரங்குன்றம் bypass ரோடுக்கு கொஞ்சம் முன்னால கோணலும் மாணலுமா ஒரு எடம் இருக்கும். அந்த எடம் ரொம்ப famous. எப்புடியும் வருசத்துக்கு ஒரு 10 பேராவது அங்க அடிபடுவாங்க. அங்கதான், ஒரு மண்டப சுவத்துல பெரிய முருகர் சிலை இருந்துச்சு. அத பாத்த உடனே, நானும் நம்ம பாரம்பரியத்தே காப்பாத்த கண்ண மூடி ‘முருகா! காப்பாத்துப்பா’னு கும்பிட்டேன். ஆனா, அசதியில மூடுன கண்ண தெறக்க முடியலே…

கடைசியா, திறந்தப்போ மேல நிலாவும், சுத்தி சனக் கூட்டமும் தெரிஞ்சிது. என் ஆசை வண்டி நஞ்சு நாரா கிடந்துச்சு. நண்பன்தான் பக்கத்தில நின்னான். நல்ல தெம்பா நின்னான். பய புள்ள.. அந்த நேரத்துலயும் நம்மள கழட்டிவிட்டு எப்புடியோ விவரமா குதிச்சி அடிபடாம தப்பிச்சிட்டான். கண்ண மூடி ஓட்டினத்தில் முன்னாடி வந்த பைக்குகாரன் மேல மோதிட்டேனாம். குத்து மதிப்பா புரிஞ்சிது. அவனையும், கூட்டிகிட்டு ஆஸ்பித்திரி போனோம். அங்க உக்காந்துதான் என்ன நடந்துச்சுன்னு புரிஞ்சுக்க முயற்சி பண்ணேன். அப்பதான்.. எங்கருந்து வருதுன்னே தெரியாம, ஒரு அறை. பொறி கலங்கிடுச்சு. காதுக்குள்ள ஒரு ‘ங்கொய்யய்ய்ய்…’. அடிபட்டவனோட தம்பி அடிச்சானாம் (அடுத்த நாள் சொன்னாங்க). அப்புறம், அடுத்த கொஞ்ச நாள்ல அந்த பிரச்சனை தீர்ந்துடுச்சு.

ஆனா, இன்னிக்கு வரைக்கும் என்னால மறக்க முடியாத விஷயம் ரெண்டு. ஒன்னு -’ஏரோபிளேன் பறக்குது பார் மேலே’ பாட்டு. இன்னொன்னு - ‘ங்கொய்யய்ய்ய்…’

2 comments:

Seenivasan said...

lol :)

ketta pasanga. college-la thanni vera adichaya nee?@?@

Sarangan Rajamanickam said...

:-).. Hi.. Hi