Friday, February 15, 2008

நாங்களும் தொழிலாளர்கள்தான்.....

நான் சிறு வயதாக (அதாவது பன்னிரண்டு - பதிமூன்று வயது.....நான் இன்னமும் இருபத்தி மூணு வயசு சின்ன பையன்தான்...:-) ) இருக்கும் பொழுது தொழிற்சங்கங்கள் மேல் ஒரு நல்ல அபிப்பிராயம் இருந்தது இல்லை. அதுவும் ஊதிய உயர்வு கேட்டும், சரியான ஊதியம் கேட்டும் தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தினால், "தொழிலின் முதலாளி இவ்வளவு சம்பளம்தான் தர முடியும் என்கிறார்.. இவர்களுக்கு விருப்பம் இருந்தால் வேலை செய்யட்டும். இல்லையென்றால் வேறு வேலை தேடி கொள்ளலாமே. அதை விடுத்து, நான் இங்குதான் வேலை பார்ப்பேன். நீ நான் கேட்கும் சம்பளத்தை கொடுக்க வேண்டும் என்று கேட்பது நியாயமா?" என்றுதான் நினைப்பேன்.

ஆனால் படித்து முடித்து வேலைக்கு வந்த பிறகே பெரிய நிறுவனங்கள் எப்படி தொழிலாளர்களை ஏமாற்றுகிறது என்று புரிகிறது. இந்த பதிவில், நான் வேலை பார்க்கும் மென்பொருள் சேவை துறை பற்றி மட்டும் எழுதுகிறேன். (மென்பொருள் சேவை துறையில் ஏ.சி. அறையில் வேலை பார்ப்பவன் எல்லாம் தொழிலாளர் கணக்கில் சேர்த்து கொள்ள முடியாது என்று யாராவது சொன்னால்.....அய்யா,அந்த ஏ.சி. எங்களுக்கு அல்லவாம், கணிப்பொறிகளுக்காம்..அதனால் அது வேலை செய்ய வில்லை என்றால் நாங்கள் கேட்க கூடாது என்று எங்கள் நிர்வாகம் மேடையிலேயே அறிவித்து விட்டது..அதனால் நாங்களும் தொழிலாளர்கள்தான்.)

பொதுவாக, இந்த துறையில் உள்ள நிறுவனங்கள், அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள நிறுவங்களில் இருந்து வேலை வாங்கி செய்யும். இப்படி வாங்கும் பொழுது,
1. இந்த வேலையை செய்கிறேன். அப்படி செய்யும் பொழுது ஒரு ஆள் ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு பணம் கொடு என்று ஒப்பந்தம் போடுவது உண்டு.
2. இல்லையென்றால், இந்த வேலையை செய்ய இவ்வளவு பணம் கொடு. எத்தனை ஆள், நேரம் என்றெல்லாம் நான் பார்த்து கொள்கிறேன் என்றும் ஒப்பந்தம் போடுவது உண்டு.

நம் நிறுவனங்கள், இரண்டிலுமே, தொழிலாளர்களை ஏமாற்றி லாபம் பார்ப்பதில் கில்லாடிகள். முதல் வகை ஒப்பந்தம் என்றால் பத்து ஆட்கள் கணக்கை காட்டி பணம் வாங்கி கொண்டு, நான்கு ஆட்களை வைத்து வேலை முடிப்பார்கள். அது உண்மையிலேயே பத்து ஆட்கள் வேலை தான். (நாலு ஆள் வேலைக்கு பத்து ஆள் சம்பளம் கொடுக்க அமெரிக்காகாரன் ஒண்ணும் இளிச்சவாயன் இல்லை...) ஆனால் அதை நாலு ஆட்கள் மேல் திணித்து அவர்களை ஒரு நாளைக்கு பதினாறு அல்லது பதினெட்டு மணி நேரம் கசக்கி பிழிந்து வேலையை முடித்து விடுவார்கள். ஆக, பணம் கொடுத்தவனுக்கு வேலை முடித்து விட்டது, நிறுவனத்துக்கு ஆறு ஆள் சம்பளம் லாபம் (நாலு ஆள் சம்பளத்திலும் கணிசமான பங்கு நிறுவனத்துக்கு செல்லும். அதில் நிர்வாக செலவு, கட்டுமான, பயிற்சி, போக்குவரத்து, உணவு, தொழில் துறை வரிச் செலவுகள் போக மீதி உள்ளது லாபம். இந்த லாபம் நியாயமானது என்று ஒப்பு கொள்கிறேன்.) ஆக, அதிக நேரம் செக்கு மாடு மாதிரி உழைத்த நம் நான்கு தொழிலாளர்களுக்கு பட்டை நாமம். "Excellent Job" என்று ஒரு வரி மின்னஞ்சல் வரலாம். அதுவும் சந்தேகம்தான்.......

இரண்டாம் வகை ஒப்பந்தமும் இதே ரகம்தான். இரண்டு வருடம் பத்து ஆட்கள் செய்யும் வேலையை ஐந்து ஆட்களை கொண்டு ஒரே வருடத்தில் முடிக்க வைப்பார்கள். ஆக அங்கேயும் வேலை பார்ப்பவனுக்கு பட்டை நாமம்தான்.

இது இல்லாமல், ஆறு வருட அனுபவமுள்ளவன் வேலை செய்கிறான் என்று பொய் சொல்லி பணம் வாங்கி இரண்டு வருட அனுபவமுள்ளவனிடம் வேலை வாங்குவார்கள். (அனுபவத்தை பொறுத்து சம்பளம் மாறும்) உண்மையில், ஆறு வருட அனுபவமுள்ளவந்தான் அந்த வேலையை செய்ய முடியும். ஆனால், விதி..... நம் ஆள் ராத்திரி பகல் என்று உட்கார்ந்து வேலையை முடிப்பான்.

அதோடு, சொல்லும் சம்பளமும் முழுதாக கிடைக்காது. வருடம் முன்று லட்சம் சம்பளம் என்பான். ஆனால், அதில் நாற்பது ஆயிரம் "நிறுவன நிலை பொறுத்து" (Variable Compensation)என்று இருக்கும். அதாவது, நிறுவனம் நன்றாக நடந்தால் அதை கொடுப்பார்கள். இல்லையென்றால் அது இல்லை. நியாயம்தானே என்று சொல்லலாம்? ஆனால், எந்த வருடமும் அந்த பணம் உங்களுக்கு முழுதாக கிடைக்காது. "ஏனப்பா...போன வருடம் நிறுவனம் 30% லாபம் பார்த்ததே..பிறகு என் வெறும் 20 ஆயிரம்தான் தர்றீங்க?" என்று கேட்டால் "நாங்கள் 35% எதிர் பார்த்தோம்" என்று பதில் வரும். நானாடா உன்னை 35% எதிர்பார்க்க சொன்னேன்?

நம் தமிழ் படத்தில் கூலி தொழிலாளர் வாங்கும் சம்பளத்தை வாசலில் ரவுடிகள் பிடுங்கிக் கொள்வார்கள். அது மாதிரி இல்லடா புதுசு புதுசா யோசிச்சு காசு புடுங்குறாங்க... இதுக்குன்னே ரூம் போட்டு யோசிப்பாங்களோ.....

இது எதையுமே கேள்வி கேட்க இயலாது. கொடுமை என்னவென்றால், எவனிடம் கேட்டாலும் "கம்பெனி பாலிசி" என்பான். என் மேனேஜரிடம் கேட்டாலும் அதே பதில்தான். துறை தலைவரிடம் கேட்டாலும் அதே பதில்தான். நிதி நிர்வாக துறையிடம் கேட்டாலும் அதே பதில்தான். மனித வள துறையிடம் கேட்டாலும் அதே பதில்தான். மொத்த நிறுவனத்தின் தலைவரிடம் கேட்டாலும் அதே பதில்தான்.. "கம்பெனி பாலிசி"... ஏன்டா..கிண்டலா பண்றீங்க? நீங்கெல்லாம் சேந்தாத்தான் கம்பெனி.... அப்புறம் என்ன கம்பெனின்னு செவ்வாய் கிரகத்துல எதோ ஒன்னு இருக்கற மாதிரியும், அங்க இருந்து அது சொல்ற பாலிசிய இங்க யாரும் மாத்த முடியாது மாதிரியும் பேசுவாங்கே.... அதையும் முகத்த ரொம்ப serious-ஆ வெச்சுகிட்டு ரொம்ப வருத்தப்படுற மாதிரி குரலோடு மேடையில் "கம்பெனி பாலிசி"ன்னு சொல்லுவாங்க பாக்கணும்.... நடிப்புக்கான ஆஸ்கார் விருத இங்க கொடுங்கப்பா... எதப்பா "கம்பெனி பாலிசி"? எனக்கு வர வேண்டிய சம்பளத்தை புடுங்கி தின்பதா "கம்பெனி பாலிசி"?

இத அரசாங்கமும் கேக்காது... சங்கம் இல்லாததுனால ஒற்றுமையா வேலை பாக்குறவனும் கேக்க மாட்டான்... அதையும் மீறி கேட்டால், "எங்களால் இவ்வளவு சம்பளம்தான் கொடுக்க முடியும். முடிந்தால் வேலை பாருங்கள். இல்லையென்றால், வேறு இடத்தில் வேலை தேடி கொள்ளுங்கள்" என்று சொல்வார்கள். என் மனதில் எங்கேயோ குத்துகிறது......

2 comments:

Anonymous said...

நான் ஓரிரு மாதம் call centreல் வேலை பார்த்தேன். அப்ப இதே போல் company policy மேல் கடுப்பாக இருந்தது. எல்லாம் கூட்டுக் களவாணிகள் தான். தகவல் தொழில்நுட்பத் துறை பணிச்சூழல் பற்றி பலருக்கு சரியான புரிதல் இல்லை. இது போன்ற இடுகைகளைத் தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.

Unknown said...

வாருங்கள் அனானி நண்பரே......
பின்னூட்டதிற்கு நன்றி......
ஆம்..... கால் சென்டர்களின் நிலை இன்னும் மோசம்....
அதிக நேரம் வேலை பார்க்க முடியாது என்று நான் சொல்ல வில்லை... ஆனால் அதற்கான நியாயமான சம்பளத்தை கொடுக்க வேண்டும் என்றுதான் கேட்கிறேன்...