Thursday, February 14, 2008

தி மோட்டார் சைக்கிள் டைரீஸ்

அமெரிக்கா வந்த ஒன்பது மாதங்களில் பல்வேறு படங்களை பார்த்து விட்டேன். (நெட் பிளிக்ஸ்ன் புண்ணியம்!!!) இதை போன்ற வசதி இந்தியாவிலும் இருந்தால் மிகவும் நல்லது. பல்வேறு நாட்டின் படங்களையும் அந்த நாட்டின் கலாச்சார பின்னணியும் மக்கள் சிந்தனை மற்றும் வாழ்க்கை முறையும் அறிந்து கொள்ள முடிகின்றது. அந்த வரிசையில் கடைசியாக பார்த்த படம் "தி மோட்டார் சைக்கிள் டைரீஸ்" .

கல்லூரி செல்லும் மாணவன் ஒருவன் தனது நண்பனுடன் தென் அமெரிக்கா கண்டம் முழுவதும் பார்க்க கிளம்புகிறான். அந்த பயணத்தில் அவன் சந்திக்கும் மனிதர்களும், மக்களின் வாழ்க்கை நிலையும் அவனை சிந்திக்க தூண்டுகின்றன. பின்னாளில் மாபெரும் புரட்சியாளராக மாறிய சே குவாராவின் பயணத்தை எந்த விதமான அரசியல் மற்றும் சித்தந்தங்களின் சார்பும் இல்லாது ஒரு மனிதனின் பயணத்தை மட்டுமே இந்த படம் மிக அழகாக எடுத்து காட்டுகிறது.

(இன்னும் இந்த உலகில் கம்யூனிசம் பேசபடுவதற்கு ஒரு முக்கியமான காரணமாகவும், முதலாளித்துவ அரசாங்கங்களை எதிர்க்க வேண்டும் என்பதை கொள்கையாக கொண்ட ஒருவரை பற்றிய படத்தை அமெரிக்கா தனது நாட்டிலே அனுமதித்து இருப்பது ஆச்சர்யம். இதுவே நம் நாடு என்றால் இது சாத்தியமா என்று யோசித்து பார்க்கிறேன். மருத்துவர் அய்யாவும், சின்னையா அன்புமணியும் பட பெட்டியை கொளுத்துவார்கள். பால் தாக்கரேவும், பீஜெபீயும் திரை அரங்கையே கொளுத்திவிடுவார்கள்.....இருவர் படம் ரிலீஸ் ஆவதற்கு பட்ட பாடு நினைவிற்கு வருகிறது)

இந்த படத்தின் அடிப்படையே சேவின் பயணம்தான். இன்னும் ஒரு வருடத்திற்குள் மருத்துவ படிப்பை முடிக்கும் நிலையில் உள்ள ஒரு மாணவன் அதை தள்ளி வைத்து விட்டு பயணம் செல்வதும், முதலில் எதிர்த்தாலும் பிறகு "நான் இளமையோடு இருந்து இருந்தால் நானும் உன்னோடு வந்திருப்பேன்" என்று சேவின் தந்தை சொல்வதும் அடுத்த ஆச்சர்யம். படிக்க வேண்டும், படித்து வேலைக்கு செல்ல வேண்டும் என்பதை மட்டுமே அதிக பட்ச லட்சியமாக கற்று கொடுக்கும் இன்றைய இந்திய கல்வி சூழலில் பயின்ற எனக்கு, இந்த பயணம் புதிது. இந்திய கல்வி மற்றும் சமுக நிலை மாணவர்களுக்கு வாழ்கையை கொஞ்சமும் கற்று தருவது இல்லை என்பது மிகவும் வேதனைக்கு உரிய விஷயம். அதை போன்றே பயணங்களின் முக்கியத்துவம் இன்று அதிகம் உணர படுவது இல்லை என்றும் எண்ண தோன்றுகிறது. (அதுவும் ஒரு வருடம் படிப்பு அதிகரித்தால் தங்கள் திருமணம் பாதிக்கும் என்று மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தும் தமிழ் நாட்டில்..)

ஒரு காட்சியில் சேவின் நண்பன் கட்சி ஆரம்பித்து தேர்தலில் வென்று புரட்சி செய்யலாம் என்று கூறும் பொழுது "ஆயுதம் இல்லாத புரட்சி சாத்தியம் இல்லை" என்பது சேவின் வாதமாக இருக்கிறது. "ஒருவனின் எதிரியே அவனின் ஆயுதங்களை தீர்மானிக்கிறான்" என்ற கூற்றின்படி சேவின் வாதங்களை நியாயப் படுத்தினாலும், வன்முறையால் எதற்கும் ஒரு தீர்வு கிடைக்கும் என்றோ அவ்வாறு கிடைத்தால் அது நிரந்தர தீர்வாக இருக்கும் என்றோ என்னால் ஏற்று கொள்ள இயலவில்லை. தவறான வழி தவறான முடிவுகளையே தரும் என்பது எனது நம்பிக்கை.

அதே சமயம், எந்த சமயத்திலும் உண்மை மட்டுமே பேசுவேன் என்று சொல்லும் 'சே'வை பார்க்கும் பொழுது மனதில் ஒரு குற்ற உணர்வு வருவதை தடுக்க இயலவில்லை. (அதுவும் onsite coordinator ஆன பின்பு நான் தினமும் சொல்லும் பொய்களை நினைத்தால், "பொய் சொன்ன வாயிற்கு போஜனம் கிடைக்காது" என்பார்கள்...எனக்கு ஒரு வாய் காபி கூட கிடைக்காது....ஜீன்ஸ் படத்தில் எஸ்.வி.சேகர் சொல்வது போல).. அதுவும் "ஸ்ட்ரீட் ஸ்மார்ட்"ஆக வளர்வது நல்லது என்று நினைக்கும் நமது சமூகத்தில்......

படத்தில் 'சே'விற்கு அவரது தோழி சிறிது பணம் கொடுப்பார். எந்த சமயத்திலும், தன்னுடைய செலவிற்கு அதை எடுக்காத சே, வறுமையால் வாடும் ஒரு குடும்பத்திற்கு தாமாக அதை கொடுப்பதும், தொழு நோயால் பாதித்தவர்களை மனித தன்மையோடு நடத்துவதும், ஆச்துமாவால் சிரமபட்டாலும் பயணத்தை தொடர்வதும் நெஞ்சை நெகிழ வைக்கும்.

அடுத்தவனின் அவல வாழ்வினை கண்டு வருந்தும் 'சே'வின் மனநிலைக்கும், 'வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்' என்ற வள்ளலாருக்கும் அதிகம் வித்தியாசம் இல்லை. வாட்டத்தை போக்க இருவர் கையாண்ட வழிகள் மட்டுமே வேறு. சக மனிதனின் அவல வாழ்க்கையை கண்டு வருந்தி, அதனை மாற்ற தான் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்து, தன்னால் அது முடியும் என்று நம்பி, நம்பியதை செயலிலும் நடத்தி காட்டிய இந்த மனிதனின் கதை, நிச்சயம் நம் அனைவருக்கும் ஒரு படிப்பினையே....

No comments: