Wednesday, February 13, 2008

திருநங்கைகள்

இன்று ஒரே நாளில் இரண்டு முரண்பட்ட செய்திகளை படிக்க நேர்ந்தது. முதல் செய்திக்கான சுட்டி இங்கே. உருவத்திலே ஆணாகவும் உள்ளத்திலே பெண்ணாகவும் பிறக்கும் திருநங்கைகளில் ஒருவர், தனக்கான அடிப்படை உரிமையாக இருக்கிற பெயர் மற்றும் பாலின மாற்றத்திற்கான தனது பல வருட போராட்டத்தினை விளக்கி உள்ளார். திருநங்கைகளை நம் சமுகம் எவ்வாறு சித்ரவதை படுத்துகிறது என்பதை ஒரு குற்ற உணர்வோடு புரிந்து கொள்ள முடிகின்றது. (இவருடைய முந்தய பதிவுகள், இந்தியாவில் ஆண் பெண்ணாக மாறும் பால் மாற்று அறுவை சிகிச்சை இன்னும் வளர்ச்சி அடையாத பாதுகாப்பில்லாத நிலையில் இருப்பதை காட்டுகிறது. உண்மையிலேயே அதை படித்துவிட்டு என்னால் இரண்டு நாட்கள் தூங்க முடியவில்லை.)

அதே சமயம், harvard பல்கலைகழகத்தின் இந்த பக்கத்தையும் படித்தேன். ஓரின சேர்க்கையாளர்கள் மற்றும் பால் மாறின திருநங்கைகளுக்கு என்றே தனி 'தகவல் வழங்கும் நிகழ்ச்சிகள்' நடத்துகிறார்கள். இதில் தங்கள் நிறுவனத்தில் இவர்களுக்கான பாதுகாப்பான சூழலை விளக்கி இம்மாணவர்களை தங்கள் பல்கலைகழகத்தில் சேர வரவேற்கிறார்கள். இரண்டு செய்திகளும், திருநங்கைகளின் வாழ்வில் நாட்டிற்கு நாடு இருக்கும் வித்தியாசத்தையும், நம் நாட்டில் இருக்கும் அவல நிலையையும் எண்ண வைத்தன. .

நம் நாட்டில், இவர்கள் வாழ்க்கையை பாதுகாக்க அரசால் மட்டுமே நடவடிக்கை எடுக்க இயலும். அதே சமயம், பள்ளி மற்றும் கல்லூரி பாட திட்டங்களில் திருநங்கைகளை பற்றிய செய்திகளை சேர்க்கலாம், செக்ஸ் கல்விமுறை தேவை என்று பலரும் கூறும் இன்றைய சூழ்நிலையில், இது மிகவும் அவசியமாகிறது. நம் நாட்டில் அரசாங்கம் மூலமாக காரியம் ஆவதற்கு பல காலம் ஆகும். அதுவும் ஓட்டு வங்கியில்லாத திருநங்கைகளுக்கு அரசாங்கம் நல்லது செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. தனியார் நிறுவனங்களும் தாமாக முன் வந்து திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும். நம் ஊடகங்களும் இவர்களை கேலி பொருளாக சித்தரிக்காமல், இவர்களை ஆதரித்தும் இவர்களுக்கு உதவி செய்யும் நிறுவனங்களை ஆதரித்தும் செய்திகள் வெளியிட வேண்டும்.

சரியான வேலை வாய்ப்பும், கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடுகளும் - இவற்றிற்கு எல்லாம் மேல சக மனிதர்களின் மன மாற்றம் மட்டுமே இவர்களுக்கு ஒரு பாதுகாப்பான வாழ்க்கையை தர இயலும்.

2 comments:

Siva said...

Thirunangai ! Never heard this term used before. Is this word something coined recently ?

We are far away from restoring the rights of these people. In fact I would say we are moving away from that direction.

Sarangan Rajamanickam said...

Yes....thatz the new term now coined in Tamilnadu.....Have no idea who coined the term..but many of the bloggers and magazines are using the term...