Monday, January 19, 2015

ஷங்கரின் 'ஐ' - ஒரு பார்வைபொதுவாக ஷங்கர் படங்களை 'ரிலீஸ்' சமயத்தில் நான் பார்ப்பதில்லை. காரணம், அவர் படங்களில் இருக்கும் அரசியல். நாட்டை பாழடிக்கும் பிரச்சனைகளை எடுத்துக்கொண்டு அதற்கு மிகவும் மேம்போக்கான தட்டையான ஒரு தீர்வை கொடுப்பார். அதனை சுற்றி மசாலாவாக இசை, பாடல், நகைச்சுவை, பிரம்மாண்டம் என்று அலங்கரித்து பரிமாறுவார். இதை பார்த்து விட்டு, நம்மால் வாய் விட்டு புலம்ப கூட முடியாது. கூட இருக்கும் நண்பர்களே அடிக்க வருவார்கள். எதற்கு வம்பு? அதனால், அந்த படங்களை ஆறப் போட்டு பிறகு பார்ப்பேன் [வேறு வழி இல்லை. எப்படியும் டீவியில் போட்டு விடுவார்கள்]. அப்புறம் புலம்பினாலும் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். அவர்கள் ["இவனுக்கு வேற வேலை இல்ல" என்று மனதிற்குள் நினைத்து கொண்டு...] வேறு எதாவது ஒரு படத்திற்கு நகர்ந்திருப்பார்கள்.

அவர் எடுக்கும் பல படங்கள் இந்த இரகம்தான். உதாரணம் - 'ஜென்டில்மேன்'. மேலோட்டமாக பார்த்தால், நன்றாக படித்தாலும் கல்லூரியில் இடம் கிடைக்காத இரண்டு பேரில் ஒருவன் சாகிறான். மற்றொருவன், இந்த சமுதாயத்தை எதிர்த்து போராடுகிறான். கொஞ்சம் உற்று கவனித்தால் இட ஒதுக்கீடு அரசியல் தெளிவாக தெரியும்.

RTO ஆபீசில் இலஞ்சம் வாங்கும் பியூன் கையை வெட்டினால் இந்தியா வல்லரசாகி விடும். - 'இந்தியன்'

குடிப்பவர்களை பாம்பு விட்டு கொல்ல வேண்டும். (TASMAC நடத்தும் அரசாங்கத்தை ஒன்றும் செய்ய வேண்டாம்) அடிபட்டு கிடப்பவனுக்கு வண்டி இல்லை என்று சொல்பவனை எருமை மாடு விட்டு கொல்லலாம். (நேரத்துக்கு வராத காவல் துறையும், மருத்துவ துறையும் அய்யோ பாவம்). இப்படியெல்லாம் தண்டனை கொடுத்து இந்தியாவை வல்லரசாக்க 'கருட புராணம்' படித்து கொண்டு ஒரு 'ஹீரோ' வருவார். - 'அந்நியன்'

இப்படி எல்லா படத்திலும், பிரச்சனைகளுக்கு ஒரு மொன்னையான middle class mentality தீர்வை கொடுப்பார். ஒரு வேளை, இந்த middle class mentality தீர்வுகள்தான்  மக்களுக்கு பிடிக்கிறதா?

"Emergency மட்டும் தொடர்ந்து இருந்து இருக்கணும் சார். அப்போதான் எல்லா வண்டியும் டையத்துக்கு வரும்". "British அரசாங்கமே தொடர்ந்து ஆட்சி பண்ணி இருந்தா, நம்ம நாடு எவ்வளவோ முன்னேறி இருக்கும்". இது போன்ற கருத்துக்களுக்கும், ஷங்கர் தன் படங்களில் கொடுக்கும் தீர்வுகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

அரசியல் இல்லாமல் அவர் எடுக்கும் படங்கள் நன்றாக இருந்தன. - காதலன், ஜீன்ஸ். [ஒரு கல்லூரி மாணவன், ஒரு மாநில ஆளுநரை எதிர்க்க முடியுமா? என்று கேட்காதீர்கள். அந்த அளவு Logic பார்த்தால், திரைப்படங்களே பார்க்க முடியாது]. இதெல்லாம் harmless, நல்ல பொழுதுபோக்கு படங்கள்.  அப்படிப்பட்ட படங்களிலும், மண்ணை  அள்ளி போட்ட படம் - 'எந்திரன்'.

இந்த படம் பல்வேறு படங்களில் இருந்து உருவப்பட்டது என்பதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை. எல்லா படங்களுமே எங்கிருந்தாவது inspire ஆகி இருக்கும்.ஆனால், ஒரு இயந்திர மனிதன், கொசுவோடு பேசுவது, இராணுவத்திற்கு சவால் விடுவது, பாம்பு உருவம் எடுத்து வானத்தில் பறப்பது எல்லாம்.. ஹி..ஹி.... Science-Fiction படங்களில் fiction எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவு Science-உம்  முக்கியம். அதில் கோட்டை விட்டு, நாங்கள் hollywood-க்கு  நிகராக படம் எடுத்தோம் என்பதெல்லாம் போங்கு....இப்படிப்பட்ட படங்களின் வரிசையில், லேட்டஸ்ட் வரவு - 'ஐ'. மனைவியின் வற்புறுத்தலால் முதல் வாரமே சென்று பார்த்தேன்... :-)

கதை: காதலர்கள் 2 பேர். வில்லன்கள் 4 பேர். வில்லன்கள் கதாநாயகனை குரூபி ஆக்குகிறார்கள். கதாநாயகன், அதற்கும் மேலே போய், அவர்களை குரூபி ஆக்குகிறார். சுபம்.

முதலில் விக்ரம். இவர் உண்மையிலேயே மனிதர்தானா? இல்லை 'எந்திரன்' படத்தில் வரும் 'சிட்டி' மாதிரி ரோபோவா? உடம்பை அப்படி மாற்றி இருக்கிறார். Hats off! 'லிங்கேசன்' பாத்திரத்தில் அவர் உடலை பார்த்து அரங்கில் இருந்த பெண்கள் எல்லாம் வாயை பிளந்தனர். அவர்களின் கணவர்கள் காதில் புகை வந்தது..... என் மனைவியையும் என்னையும் சேர்த்து.... உடலை மாற்றுவதில் எடுத்து கொண்ட அக்கறையை கொஞ்சம் வட சென்னை மொழி பேசுவதில் காட்டி இருக்கலாம். அவர் பேசும் மொழி, ரொம்பவும் செயற்கையாக இருந்தது. ஆறு படத்தில் சூர்யா பேசுவாரே, புதுப்பேட்டை படத்தில் தனுஷ் பேசுவாரே அது. இவ்வளவு ஏன்? நேற்று வந்த கார்த்தி 'மெட்ராஸ்' படத்தில் அனாயசமாக வடசென்னை வட்டார மொழி பேசுவார். இந்த படத்தில் விக்ரம் கோட்டை விட்டு விட்டார். அவருடைய 'லிங்கேசன்' பாத்திரமும் அதற்கு அவர் எடுத்துக் கொண்ட சிரத்தையும் பாராட்ட பட வேண்டியவை. அவருடைய, குரூபி make-up-ஐ  எல்லோரும் புகழ்கிறார்கள். எனக்கு அது ஒன்றும் பெரிதாக தெரியவில்லை. 'கணவனே கண் கண்ட தெய்வம்' படம் என்று நினைக்கிறேன்... ஜெமினி கணேசன் இதைத்தான் செய்திருப்பார்.

எமி ஜாக்சன் - அழகு.

Visuals - அற்புதம்

இசை - ரகுமான் ஏமாற்றி விட்டார். மோசமில்லை. பாடல் வரிகள் ரொம்பவும் ஏமாற்றி விட்டன. பொதுவாக, ஷங்கரின் படங்களில் பாடல் வரிகள் நின்று விளையாடும். இந்த படத்தில் அநியாயம். கொஞ்சமும் மனதில் தங்கவில்லை.

திரைக்கதை - அட போங்கப்பா. படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடத்தில், சுரேஷ் கோபிதான் வில்லன் என்பது தெரிந்து விடுகிறது. அப்புறம் என்ன புடலங்காய் சஸ்பென்ஸ்? விக்ரமை வைத்து கொண்டு நான்கு வில்லன்களும் சிரிப்பது, கிட்டத்தட்ட நூறு சிவாஜி - எம்.ஜி.ஆர் படங்களில் பார்த்து சலித்த காட்சி. படத்தின் முதுகெலும்பே - விக்ரம் வில்லன்களை எப்படி பழி வாங்குகிறார் என்பதுதான். அதில் எந்த புதுமையும் இல்லை.

நான் 12-th படிக்கும் பொழுது நடந்தது இது. நண்பன் ஒருவனின் நோட்டை தெரியாமல் சேதப்படுத்தி விட்டேன். பதிலுக்கு, அவன், அதற்கும் மேலே போய், என் நோட்டை ஒளித்து வைத்தான். உடனே நான், அதற்கும் மேலே போய், அவன் புத்தகத்தை கிழித்தேன். அவன், அதற்கும் மேலே போய், என் புத்தகத்தை திருடிக் கொண்டான். நான், அதற்கும் மேலே போய், அவனுடைய சைக்கிளில் காற்றை பிடுங்கி விட்டேன். அவன், அதற்கும் மேலே போய்.....

இப்படித்தான், விக்ரம் பழி வாங்குவதும் இருக்கிறது.  இதில் எதற்காக அந்த திருநங்கை? ஏற்கனவே மிகவும் நொந்து போன ஒரு இனம். அதை இப்படி காட்டி மேலும் நோகடிப்பது தேவையா? இன்று திருநங்கைகள் இந்த படத்திற்கு எதிராக சிறு போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். அவர்களால் அவ்வளவுதான் முடியும். ஷங்கர் இப்படி செய்தது பெரும் தவறு. திருநங்கைகளுக்கு உண்மையிலேயே சம உரிமை கிடைத்த பிறகு இப்படி காட்டிக் கொள்ளுங்கள். சமூகத்தால் அவர்கள் கிட்டத்தட்ட ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும்  நிலையில், ஒரு திருநங்கை காதலிப்பதை கேலியாகவும், அதை மறுத்தால் அவளை வில்லியாகவும் காட்ட வேண்டுமா? எமி ஜாக்சன் காதலை சொல்லும் பொழுது மென்மையாக, கண்களில் நீர் தளும்ப உணர்ச்சி பொங்க சொல்லுவாராம். அதே ஒரு திருநங்கை, காதலை சொல்லக்கூட, தண்ணியடித்து விட்டு விக்ரமை படுக்கை அறைக்கு இழுத்து சென்று பலவந்தமாக கட்டி பிடிப்பாராம். ஒரு ஆங்கில நாடகத்தில் சொல்வது போல: "How many different types of disgusting should you be to portray and enjoy such a scene?"

படத்தின் நகைச்சுவை அடுத்த கொடுமை. இன்றைய தமிழ் சினிமா சூழலையும், நகைச்சுவை படங்களையும் ஷங்கரும், சந்தானமும் பார்க்கிறார்களா என்று சந்தேகம் வருகிறது. மூடர் கூடம், ஜிகர்தண்டா என்று நகைச்சுவை வேறு ஒரு கோணத்தில் பயணிக்கும் காலத்தில், இன்னமும் திருநங்கைகளை கேலி செய்வதும், உள்ளாடைகளை வைத்து காமெடி செய்வதும்தான் நகைச்சுவை என்று உண்மையிலேயே இவர்கள் நம்புகிறார்களா? கொஞ்ச நாள், முன்னால் 'ஆரண்ய காண்டம்' என்ற படம் பார்த்தேன். "உங்களுக்கு ரஜினி பிடிக்குமா? இல்ல கமல் பிடிக்குமா?"  என்ற ஒற்றை கேள்வியில் அரங்கில் இருந்த அத்தனை பேர் முகத்திலும் புன்னகை தவழும். இப்படிப்பட்ட காலத்தில், "Google-ஐ மூட" சொல்வதும், "தியா இட்லியும்" நகைச்சுவையா என்று ஷங்கரும், சந்தானமும் முடிவு செய்து கொள்ளட்டும்.

படத்தில் நான் இரசித்த ஒரே வசனம்: "side வகிடு எடுத்து silent-ஆ பேசுனா சரத்பாபுன்னு நினைச்சுருவியா? Main Villain அவருதாண்டா..". மற்றபடி:

'I' - Got Frustrated.

Tuesday, June 10, 2014

பொன்மாலை

அப்ப நான் பதினோராம் வகுப்பு படிச்சேன். அந்த பள்ளிகூடத்துக்கு புதுசா வந்து சேர்ந்து இருந்தேன். பத்தாவது வரைக்கும் பழனியில் ஒரு பள்ளிக்கூடம். இப்போதான் பதினோராவது படிக்க என்னை உடுமலைபேட்டை பள்ளிக்கூடத்துல சேர்த்து விட்டாங்க. இந்த பள்ளிகூடத்து தமிழ் வாத்தியாரம்மா ஒரு மாதிரி. Internals டெஸ்டுக்கு எல்லோருக்கும் தலைப்பு கொடுத்து கவிதை எழுதிட்டு வர சொல்லிடாங்க. பதினோராவது படிக்குற பையனுக்கு எல்லாம் கவிதையா? காலக் கொடுமை...

நானும் கவிதைன்னு சொல்லி இரண்டு எழுதுனேன். அதுல ஒன்னு தென்றல். இன்னொன்னு பொன்மாலை. பழைய குப்பைகளை சுத்தம் செஞ்சப்போ இப்பதான் கிடைச்சுது. கவிதைக்கு உரிய எந்த இலக்கணமும் இல்லாம ஒரு மாதிரி காமா சோமா கவிதை. ஒரு மாதிரி கதையையும் கவிதையையும் mix பண்ணி எழுதி Internals-க்கு சமாளிச்சேன். அதை இங்கே பதிவு பண்றேன்....

பொன்மாலை  

அந்த வீட்டில்
நிறைந்தது அழகுக்கோலம்
அது பூண்டிருந்தது
விழாக் கோலம்

அந்த வீட்டுப்பெண்ணுக்கு
இன்று மணநாள்
அந்த வீட்டிற்கிது
மறக்கமுடியாத  திருநாள்

தாலி கட்டுவதற்கு நேரமோ
இல்லை மிகுதி
இருக்கின்ற நேரமோ
வினாடியிலும் சிறுபகுதி

தாலி கட்டும் வேளையில்
நிறுத்துங்கள் என்றொரு குரல்

கேட்டவுடன் பலர்
முகம் சுளித்தனர்
திருமணம் தடைபடுமோ
என மனம் பதைத்தனர்

வந்தவன் பெயர் கண்ணன்
தொழில் அவனுக்கு சமூக சேவை
அதை செய்வதில் அவன் 'கண்'ணன்

வந்தவன் ஆற்றினான்
ஓர் உரை.
அதற்கு ஈடு வள்ளுவனின்
பொது மறை

வரதட்சணை வாங்கி
நடக்குமிது திருமணமா?
இதனை இரசிக்கும்
உங்களுக்கென்ன கல்மனமா?

கொடுத்தாளோ ஆதாமுக்கு
ஏவாள் தட்சணை?
தட்சணை வாங்கலாமென
எவனெழுதினான் இலச்சினை?

கரும்பு தின்னக் கூலியா?
மணமகன் என்ன பேடியா?

வாங்குமுன் சிந்தித்தீரா
ஒரு கணம்?
கொடுத்துத்தான் தீருவேன்
என்றாலது தலைக்கனம்..

வரதட்சணை வாங்கிச்
செய்தாலது வியாபாரம்
அவ்வாறு செய்தால்
இருப்பதோ வாழ்க்கை
முழுவதும் காரம்

மனமும் மனமும்
சேர்ந்தால்தானது திருமணம்
பணம் கொடுப்பதாலேயே
சேராது இருமனம்

பணமும் பணமும்
சேர்வதென்பது வேறு
அதை கொடுத்து
மணம் செய்தால் ஆகும்
வாழ்க்கை சேறு

இதனை சற்றே
சிந்தியுங்கள் பெற்றோர்களே
மனம் செய்வதற்கு
பலவற்றை விற்றோர்களே

சிரிக்கும்படி பேசி
முடித்தான் கண்ணன்
தான் நினைத்ததை
முடிப்பதில் மன்னன்

உரையால் அனைவரின்
மனமும் மாறியது
ஏழையின் சொல்
அம்பலம் ஏறியது

நடந்தது திருமணம்
தட்சணை இல்லாமல்
வரதட்சணை கொடுமை ஓடியது
எவரிடத்திலும் சொல்லாமல்

இப்பொழுது,

மணமக்கள் மாற்றுவது
வெறும் வெண்மாலை அல்ல
வரதட்சணை வாங்காததால்
அது பொன்மாலை
ஆம் பொன்மாலை

- இரா. சாரங்கன்  

Friday, October 04, 2013

என் இந்திய பயணம்.....

கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து இந்தியா சென்று திரும்பி வந்தேன். இந்த முறையும் வெறும் 3 வாரங்கள் மட்டுமே பயணம். சென்னையின் உள்நாட்டு விமான நிலையத்தை காண ஆவலோடு சென்றேன். கடுப்பானது மட்டும்தான் மிச்சம். கொஞ்சம் அழகான 'ஷெட்' கட்டி முடித்துள்ளனர். இதற்கு கோவை உள்நாட்டு விமான நிலையம் நூறு மடங்கு மேல். வயிற்றெரிச்சலுடன் பழனிக்கு பயணமானேன்.  

என் சொந்த ஊரான பழனி இன்னமும் அப்படியே இருக்கிறது. தமிழ்நாட்டில் பல இடங்களில் மழை பெய்த பொழுதும் பழனி அதன் சுற்று வட்டாரங்களில் கொஞ்சமும் மழை இல்லை. தென்னை மரங்கள் சாவின் விளிம்பில் இருந்தன. பள்ளிகூட நண்பன் ஒருவனிடம் பேசிக் கொண்டிருந்தேன். காற்றாலை மின்சாரம் எடுப்பதற்காக அமைக்கப்பட்ட இராட்சச விசிறிகள்தான் மழை வராததற்கு காரணம் என்றான். இதை பற்றி ஏற்கனவே ஒரு சில கட்டுரைகளை படித்திருக்கிறேன். ஆனாலும், இதை எந்த அளவு நம்ப முடியும் என்று தெரியவில்லை. பழனியை விட காற்றலை அதிகமாக இருக்கும் உடுமலை, திருப்பூர் பகுதிகளில் மழை நன்றாகவே பெய்துள்ளது. ஆனால் பழனியை சுற்றி வறண்ட பூமிதான்.

விவசாயிகள் மோட்டார் மூலம் எடுக்கும் நிலத்தடி நீரை மட்டுமே நம்பி உள்ளனர். இதில் என் அப்பா புதிதாக கைபேசி மூலம் மோட்டாரை இயக்கும் மென்பொருள் வைத்திருந்தார். இதன் மூலம் எந்த இடத்தில் இருந்தாலும் ஊரில் உள்ள மோட்டாரை இயக்க முடிந்தது. மின்சாரம் இருக்கிறதா இல்லையா, மோட்டார் எவ்வளவு நேரம் ஓடி உள்ளது, 2 Phase மின்சாரமா அல்லது 3 Phase மின்சாரமா என்று பல விசயங்களை கைபேசி மூலமாகவே தெரிந்து கொள்ள முடிகின்றது. விவசாயிகளுக்கு ஏற்ற வகையில் எளிய முறையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வடிவமைத்து இருக்கிறது ஒரு தனியார் நிறுவனம். "தேவையே கண்டுபிடிப்புகளின் தாய்" - உண்மைதான். 

என் மனைவி பிறந்து வளர்ந்தது சென்னையில். இதுவரை மதுரையை பார்த்ததே இல்லை என்று சொன்னாள். அதனால், ஒரு நாள் மதுரை பயணம். அழகர் கோவில், பழமுதிர் சோலை, மீனாட்சி அம்மன் கோவில் என்று ஒரு சுற்று. இவ்வளவு அழகான, சரித்திர புகழ் பெற்ற, ஆன்மீக திருத்தலங்களை நம் அரசாங்கம் முறையாக பராமரிக்கலாம். ஆனால், கொஞ்சமும் கவனிப்பாரன்றி கிடக்கின்றன. அதிலும், வைகை நதி.. இல்லை..இல்லை.. வைகை சாக்கடை என்று தாராளமாக பெயர் மாற்றம் செய்யலாம். அந்த சுந்தரேச்வர பெருமானே வந்து ஊழித் தாண்டவம் ஆடினால்தான் நம் நாடு உருப்படும்.

நெல்லை லாலா மிட்டாய் கடையில் அல்வா வாங்கி சாப்பிட்டேன். அதே ருசி. நான்கு வருடங்கள் அந்த நகரத்தில் வசித்தேன். இருப்பினும், ஒரு முறை கூட அம்மா மெஸ்ஸில் சாப்பிட்டதில்லை. அதனால், இந்த முறை தேடிப் போய் சாப்பிட்டேன். கள்ளிகாட்டு கோழிச்சாறும், அயிரை மீன் குழம்பும் அபார ருசி. என்ன ஒரு பிரச்னை? எல்லாமே, ஒரு ஐந்து வயது குழந்தை  சாப்பிடும் அளவு மட்டுமே தருவார்கள். இறுதியில், வந்த பில்லை பார்த்தேன். 4 பேர் சாப்பிட்டதற்கு 1300 ரூபாய். நான் இருப்பது மதுரைதானா என்று சந்தேகம் வந்தது. அம்மாவிடமும், மனைவியிடமும் நன்றாக திட்டு வாங்கினேன்.

சென்னை நகரில் செப்டம்பர் மாதத்தில் கூட நல்ல வெயில். சீயாட்டீல் குளிரில் இருந்து விட்டு இந்த வெயில் கொஞ்சமும் ஒத்துப் போகவில்லை. முடிந்த அளவு வெளியில் செல்லாமல் இருந்தேன். ஒவ்வொரு பயணத்தின் போதும் புத்தகங்கள் வாங்குவேன். இதற்காகவே, புத்தக சந்தை நடைபெறும் ஜனவரி மாதத்தில்தான் இந்தியாவிற்கு செல்வேன். இந்த முறை, அந்த கவலை இல்லை. www.udumalai.com மற்றும் www.600024.com ஆகிய வலைத்தளங்கள் மூலம் எளிதாக புத்தகங்கள் வாங்க முடிந்தது. இரண்டு நாட்களில் வீட்டிற்கே வந்து புத்தகங்களை கொடுத்து விட்டு 5000 ரூபாய் பணம் வாங்கிக் கொண்டார்கள். இணையத்திலேயே பணம் கட்டும் வசதியும் இருந்தது. இந்த இரு இணையதளங்களுமே புத்தக பிரியர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.   

வேளச்சேரியில் அமைந்திருக்கும் Phoenix mallக்கு சென்றேன். அதிர்ந்து போய் விட்டேன். அமெரிக்காவில் கூட இவ்வளவு ஆடம்பரமான வளாகங்களை பார்த்ததில்லை. ஒவ்வொரு கடையிலும் கூட்டம். [நான் சென்றது புதன் கிழமை. இதுவே சனி ஞாயிறு அன்று எப்படி இருக்கும்?] வண்டி நிறுத்த மட்டும் இரண்டு மணி நேரத்திற்கு 60 ரூபாய் வாங்குகிறார்கள். [இந்த அநியாயத்த கேட்க ஆளே இல்லையா?] பல துணி கடைகள் இருந்தன [மருந்துக்கும் ஒரு புத்தக கடை இல்லை]. ஒவ்வொன்றிலும் ஆரம்ப விலையே 1500. என் வாழ்கையில்[கல்யாணத்தை தவிர] 500 ரூபாய்க்கு மேல் நான் துணி எடுத்தது கிடையாது. இப்பொழுது இதுதான் ஆரம்ப விலை என்று சொல்கிறார்கள். மனைவி வற்புறுத்தியதனால் ஒரு 3000 ரூபாய்க்கு துணி எடுத்தேன். இந்த விலையிலும் மக்கள் கூட்டம் அலை மோதுகிறதே? எப்படி? மக்களுக்கு எங்கிருந்து இவ்வளவு காசு? எனக்கு புரியவில்லை.... அதுவும் அதே வளாகத்தில் ஒரு apartment கட்டுகிறார்கள். ஆரம்ப விலை 1.25 கோடி. அடி ஆத்தி!!!!!

 ஒரு சில வித்தியாசமான மனிதர்களையும் சந்தித்தேன்:

முதலில் இரண்டு 12ஆம் வகுப்பு மாணவர்கள்:

நான்: +2 முடித்துவிட்டு என்ன படிக்க போகிறாய்?
முதல் மாணவன்: Mechanical Engineering படிக்கப் போகிறேன். 
நான்: Good. ஏன்?
முதல் மாணவன்: எனக்கு பைக் ஓட்ட பிடிக்கும். அதனால்....
நான்: ?!?!?!... [அடுத்தவனை பார்த்து] நீ என்னப்பா படிக்க போற?
இரண்டாவது மாணவன்: Civil Engineering படிக்கப் போகிறேன். 
நான்: நல்லது. ஏன்?
இரண்டாவது மாணவன்: அப்போதான் Civil கம்பெனியிலும் வேலை செய்யலாம். IT கம்பெனியிலும் வேலை செய்யலாம். 
நான்: ?!?!?!?!

அடுத்து, ஒருவரை சந்தித்தேன். 29 வயது. நன்கு படித்து ஒரு மிகப் பெரிய நிறுவனத்தில் வேலை செய்பவர். இப்பொழுதுதான், குழந்தை பிறந்தது. 

நான்: குழந்தை ரொம்ப அழகு. என்ன பேரு?
அவர்: நந்தினி.
நான்: பொருத்தமான அழகான பேர். [பொன்னியின் செல்வன் படித்து நந்தினியின் மேல் காதல் கொண்ட கிறுக்கர்களில் நானும் ஒருவன்]
அவர்: Thanks. [கொஞ்ச நேரம் கழித்து] இது நாயுடு பேர்தான்.
நான்: என்ன?
அவர்: நந்தினிங்கர  பேர். நாயுடு பேர்தான். பார்த்துதான் வெச்சிருக்கேன். 
நான்: ?!?!?!?! 

மூன்றாவது ஒருவரை சந்தித்தேன். கிட்டத்தட்ட 55 வயது. அவர் வயதை ஒத்த ஒரு இரண்டு மூன்று பேருடன் உட்கார்ந்திருந்தார். தெரியாமல் போய் மாட்டிக் கொண்டேன்.

அவர்: அமெரிக்கா எப்படி?
நான்: ரொம்ப நல்ல ஊருங்க. 
அவர்: அங்கேதான் இருக்க போறீங்களா?
நான்: தெரியலீங்க. அப்படிதான் நினைக்கிறேன். 
அவர்: ஆமா. அங்கயே இருங்க. அதுதான் சரி. [கொஞ்ச நேரம் கழித்து] நம்மள மாதிரி forward class எல்லாம் அங்க போயிடனும். பள்ளனும் பறையனும் இங்க இருந்து ஆட்டம் போடட்டும். 
நான்: என்னது.......
            ................

[அன்று அந்த கூட்டத்தோடு நான் போட்ட சண்டையை தனி பதிவாகவே போடலாம். அன்று  வீட்டில் அடிதடி இல்லாமல் போனது அதிசயம்]

பொறுமையாக யோசித்தால்:

1. ஒரு பக்கம் விவசாயத்தில் வறட்சி. இன்னொருபுறம் மக்கள் 2000 ரூபாய் சட்டையை பேரம் பேசாமல் வாங்கி போகிறார்கள். 
2. ஒரு பக்கம் இயற்கை விவசாயம், இயற்கை பொருட்கள் என்று ஒரு கூட்டம் கத்துகிறது. எங்கு பார்த்தாலும் உடற்பயிற்சி நிலையங்கள். மறுபக்கம் KFC, McDonald கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது. 
3. ஒரு புறம் படித்தவர்கள் எண்ணிக்கை அதிகம். மறுபுறம் அதே படித்தவர்கள், பெயர் வைப்பதில் தொடங்கி வெளிநாடு செல்வது வரை பார்க்கும் சாதி. 

இப்படி வித்தியாசமான ஒரு கலவையாக அமைந்தது இந்த பயணம். எல்லாம் முடிந்து, விட்டால் போதும் என்றாகிவிட்டது. பயணத்தின் அலுப்பாலும், வெயில், மாசு, கூட்டம் தந்த  களைப்பாலும் மிகுந்த சோர்வில், இனிமேல் வரவே மாட்டோம் என்று சொல்லி விட்டு நானும் என் மனைவியும் கிளம்பினோம். அமெரிக்கா வந்தவுடன்தான் நிம்மதியாக இருந்தது. "அய்யா!!! வீட்டுக்கு வந்துட்டோம்" என்று மனம் துள்ளியது. வீட்டிற்குள்  நுழைந்து களைப்பில் படுக்கையில் சாய்ந்தோம். இரண்டு நிமிடம் கழித்து என் மனைவி ஏக்கத்துடன் சோகமாக கேட்டாள்: 

"அடுத்து எப்பங்க இந்தியா போகப் போறோம்?"


Monday, March 11, 2013

'பிரா'-வும் உப்பரிக்கையும்........எனக்கு சுமாராக ஆறு அல்லது ஏழு வயது இருக்கும். அம்மா telephone exchange-இல் வேலைக்கு போய் விடுவார்கள். அப்பா வியாபார விசயமாக வெளியே செல்ல வேண்டி இருக்கும். அண்ணன் விளையாட சென்று விடுவார். விடுமுறை நாட்களில் என்னை வீட்டில் எப்படி தனியாக விட முடியும்? அதற்காக, முன் பக்க கதவை மட்டும் பூட்டி விட்டு, எனக்கு ஒரு biscuit packet-டும், 10  ரூபாய்க்கு 5 புத்தகங்களும், பழைய புத்தக கடையில், வாங்கி கொடுத்து விட்டு அப்பா வெளியே செல்வார். மதிய உணவுக்குள் 5 புத்தகங்களையும் (biscuit packet-யும் தான்)  முடித்து விடுவேன். பின், மதிய சாப்பாட்டிற்கு பிறகு அந்த 5 புத்தகங்களையும் பாதி விலைக்கு கொடுத்து விட்டு மீண்டும் 5 புத்தகங்கள் (biscuit packet-உம் தான்) மாலை வரை கிடைக்கும். அந்த வயதில் நான் படித்த புத்தகங்கள் எல்லாம் 'காமிக்ஸ்' வகை புத்தகங்கள். முகமூடி வீரர் மாயாவி, இரும்பு கை மாயாவி, முரட்டு காளை கார்த், மேஜிக் மாண்ட்ரேக் போன்றவை. அப்பொழுது ஆரம்பித்த படிக்கும் பழக்கம். பின், மெல்ல அம்புலிமாமா, உள்ளூர் நூலகம், கல்கி, குமுதம், விகடன், புதினங்கள், கட்டுரைகள் என்று வாசிப்பு எல்லை விரிந்தது. இந்த புத்தகம் படிக்கும் பழக்கத்தால் பல கிறுக்குத்தனங்கள் செய்து தர்ம சங்கடங்களில் மாட்டி இருக்கிறேன். 

இப்படிதான் நான் ஆறாம் வகுப்பு படித்த பொழுது நடந்த ஒரு சம்பவம். அப்பொழுது, எங்கள் வீட்டின் குளியல் அறை வீட்டின் பின் பகுதியில் இருக்கும். உடை மாற்றும் அறை சற்று முன் பகுதியில் இருக்கும். அதனால், குளித்த பின் வெறும் துண்டோடு உடை மாற்றும் அறைக்கு வந்து கதவை சாத்தி விட்டு [தாழ்பாழ் போட மாட்டேன்] உடை மாற்றி கொள்வது எனது பழக்கம். அப்படிதான் ஒரு முறை, கதவை சாத்தி விட்டு உடை மாற்றலாம் என்று என் துண்டை இலேசாக தளர்த்திய சமயம், ஜன்னல் தட்டில் திறந்து இருந்த அம்புலிமாமா புத்தகம் கண்ணில்பட்டது. இராமாயணத்தில், அனுமன் கடல் கடந்த பகுதி கதையாக வந்தது என்று ஞாபகம். அப்படியே நின்று அதை படிக்க ஆரம்பித்தேன். வெளியில் எனக்கு காலை உணவு கொடுக்க காத்திருந்த சித்திக்கு சந்தேகம். "என்னடா இவன்? உள்ளே போய் 20 நிமிடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. என்னதான் பண்றான் பையன்?" என்று கதவை திறந்து உள்ளே வந்துவிட்டார். வந்தவர் என்னை பார்த்ததும் "ஐயோ!!!" என்று கத்தி வெளியே போய் சிரிக்க ஆரம்பித்து விட்டார். அவர் கத்திய பிறகுதான் தெரிந்தது. நான் படித்து கொண்டிருத்த பொழுதே, என் இடுப்பில் இருந்த துண்டு கழண்டு விழுத்து விட்டது. என் சித்தி உள்ளே வந்த பொழுது நான் "shame!!! shame!!! puppy shame!!!" என்று நின்று கொண்டு இருக்கிறேன். என் அப்பாவும் அம்மாவும் தலையில் அடித்து கொண்டு நெளிந்தபடியே சிரித்தார்கள். அதன் பிறகு பல வருடங்கள் இந்த சம்பவத்தை சொல்லி என் வீட்டார் என்னை கிண்டல் செய்தனர். 

அடுத்து ஒரு சம்பவம். இது ஏழாம் வகுப்பு படிக்கும் பொழுது நடந்தது என்று நினைக்கிறேன். அப்பொழுதெல்லாம், அம்மா அலுவலகத்தில் இருந்து ஆனந்த விகடன் கொண்டு வருவார்கள். மொத்த பத்திரிகையையும் படித்து விடுவேன். அப்பொழுது அதில் 'அனு அக்கா ஆண்ட்டி' என்று ஒரு பகுதி வந்து கொண்டு இருந்தது. இப்பொழுது, 'ஜூனியர் விகடனில்' வரும் 'கழுகார்', குமுதம் ரிப்போர்டரில் வரும் 'சுவாமி வம்பானந்தா' மாதிரி பகுதி அது. ஒரே ஒரு வித்தியாசம். அரசியல் மட்டும் பேசாமல் பல்வேறு விசயங்களை பேசும் பகுதி. ஆனால், ஒவ்வொரு வாரமும் முடிக்கும் பொழுது எதாவது கோக்கு மாக்காக முடிப்பார்கள். இப்படித்தான் ஒரு மதியம் நான், அண்ணன், அப்பா, அம்மா என்று நாலு பேரும் சாப்பிட்டு கொண்டிருந்தோம். வழக்கம் போல, நான் புத்தகம் படித்து கொண்டே சாப்பிட்டேன். இந்த 'அனு அக்கா ஆண்ட்டி' பகுதியில் ' அதுவரை நான் கேள்விப்படாத ஒரு வார்த்தையை பயன்படுத்தி இருந்தார்கள். அதனால். என் அப்பாவை கேட்டேன் - "நைனா. 'பிரா'ன்னா என்ன?". என் அப்பாவின் முகத்தை அப்பொழுது பார்க்க வேண்டுமே... 'பேஸ்த்'தடித்தது மாதிரின்னு சொல்வார்களே. அப்படி இருந்தது. என் அண்ணனுக்கு அதற்கு அர்த்தம் தெரியும் என்று நினைக்கிறேன். ஒரு நமட்டு சிரிப்போடு தலையை குனிந்து சாப்பிட்டார். என் அம்மா சொன்னார். "உன்னைய பாட புஸ்தகத்த படிக்க சொன்னா,அதை தவிர மத்த எல்லாத்தையும் படிக்கறது. அதான்... இப்பிடி 'பிரா'ன்னா என்னனு சந்தேகம் கேட்குற." ன்னு குறைபட்டார்கள். சும்மா சொல்லக்கூடாது. இரண்டு நிமிடம் கழித்து அப்பாவே 'பிரா'விற்கு விளக்கம் கொடுத்தார். 

இப்படி பல சம்பவங்கள் நடந்து இருந்தாலும், பள்ளிகூடத்தில் pass செய்வதற்கே ஒவ்வொரு பரீட்சையிலும் முக்கினாலும், நான் புத்தகங்கள் படிப்பதற்கு என் வீட்டில் யாரும் எதிர்ப்பு சொல்லவில்லை. புத்தகங்கள் வாங்க எனக்கு தரும் பணத்திலும் குறை வைக்க வில்லை. வெளியூர் போய் திரும்பி வரும் பொழுது கூட என் அப்பா ஏதாவது ஒரு புத்தகம் வாங்கி வருவார். இப்படிபட்ட குடும்பமும் ஒரு கட்டத்தில், உடம்பின் ஒட்டு மொத்த இரத்தமும் உச்சந்தலைக்கு வந்ததை போல, 'டென்ஷன்' அடைந்து நான் புத்தகம் படிக்கவே ஒரு ஆறு மாதம் தடை போட்டது. அதற்கு காரணமான சம்பவம்.....

அது நான் வரலாற்று புதினங்கள் படிக்க ஆரம்பித்த காலகட்டம். பள்ளி வகுப்பில் கூட என் மனதில் வந்தியதேவனும், ஆதித்த கரிகாலனும், மகேந்திர பல்லவனும், நாகநந்தியும், ஜெயச்சந்திரனும் சுழன்று கொண்டிருப்பார்கள். ஒரு கணம், நானே பெரிய பழுவேட்டராயனாய் நந்தினியின் காலடியில் காதல் மொழி பேசுவேன். அடுத்த கணம், நரசிம்ம பல்லவனாய் வாதாபி நகரத்தின் ஒவ்வொரு கட்டடத்தையும் ஒவ்வொரு செங்கலையும் தகர்த்து மண்ணோடு மண்ணாக்குவேன். இப்படி மாறி மாறி வரலாற்று புதினங்களை படித்து அதையே கற்பனை செய்து கொண்டு இருந்ததால் நான் பேசும் வார்த்தைகள் பல மாறுபட்டது. என் உறவினர் ஒருவர் பற்றி பேசும் பொழுது "அவருக்கு சாப்பாட்டில ஒவ்வாமை இருக்கு. அதனால கத்திரிக்காய் சாப்பிட மாட்டார்" என்று சொன்னேன். என் மாமா மகன் "என்ன ஆமை?" என்று முழித்தார். என் அம்மா குறுக்கிட்டு "ஒவ்வாமைன்னா allergy" என்று கோனார் நோட்ஸ் போட்டார். மற்றொரு முறை, பொள்ளாச்சியில் என் பெரியம்மா வீட்டிற்க்கு சென்றிருந்தோம். மாடியில் இருக்கும் வீட்டின் முன் பகுதியில் 'portico' போன்ற ஒரு அமைப்பு இருக்கும். என் அக்காவிடம் சொன்னேன். "உப்பரிக்கையில் என் சாவி விழுந்திடுச்சி. கொஞ்சம் எடுத்து தா." என் அக்காவும் பெரியம்மாவும் கொஞ்சம் 'ஜெர்க்'அடித்து என்னை பார்த்தனர். என் அப்பா சுதாரித்து கொண்டார். "மேல portico-வுல சாவி கிடக்கும். அதை எடுத்து தாம்மா" என்று சொன்னார். அன்று, அவர்கள் அடைந்த 'ஜெர்க்'கின் விளைவாக ஆறு மாதங்கள் தமிழ் புத்தகங்கள் படிக்க வீட்டில் தடா. 

ஒரு வழியாக ஆறு மாதம் கழித்து தடா விலக்கப்பட்டது. மீண்டும் புத்தகங்கள் வாசிப்பு தொடர்ந்தது. இந்த முறை சற்று முன்னேறி ஜெயகாந்தன், ஜானகிராமன், புதுமைபித்தன் என்று படிக்க தொடங்கினேன். உள்ளூர் நூலகத்தில் திராவிட இயக்க வரலாறு புத்தகங்கள் கிடைத்தது. தேவநேய பாவாணர், மா.பொ.சி என்று கிடைத்த எல்லாவற்றையும் படித்தேன். உப்பரிக்கை, மேல் மாடம் எல்லாம் கொஞ்சம் அடங்கியது. ஆனால், விதி யாரை விட்டது? கரைகள் தூங்க விரும்பினாலும் அலைகள் விடுவதில்லை என்று சொல்வார்கள். அது போல, நான் சும்மா இருந்தாலும் சொறிஞ்சு விடுற மாதிரியே சம்பவங்கள் நடந்தது. 'கல்லக்குடி கொண்ட கருணாநிதி' கதை உங்கள் எல்லோருக்கும் தெரியும். அந்த அளவுக்கு இல்லா விட்டாலும் நானும் சிறிய போராட்டம் செய்தேன். 

ஒன்பதாம் வகுப்பு படித்த சமயம். நானும் நண்பர்கள் சிவராஜும், செந்திலும் சிறுநீர் கழிக்க போனோம். அப்பொழுது ஏதோ தமிழில் பேசி கொண்டிருந்தோம். அப்பொழுது, மூன்றாம் வகுப்பு படிக்கும் ஒரு பையன் எங்களை தாண்டி போனான். போனவன் என்ன நினைத்தானோ தெரியவில்லை. நேராக, எங்கள் பள்ளிகூட தாளாளரிடம் போய் "Sir. Sir. Three brothers are speaking tamil in the bathroom sir"ன்னு போட்டு கொடுத்துவிட்டான். [எங்கள் பள்ளிகூடத்தில் தமிழ் வகுப்பை தவிர மற்ற நேரங்களில் தமிழ் பேசக்கூடாது]வெளியில் வந்த எங்களை வரவேற்க அவரே காத்திருந்தார். எங்களை கூப்பிட்டார். அவரோட உடைஞ்சி போன இங்க்லீஷ்ல "speak tamil in bathroom? tell boys" என்று சொன்னார். முதலில் செந்தில். "No sir". பின் சிவராஜை கேட்டார். "No Sir" என்றான். கடைசியில் என்னிடம் வந்தார். "you tell truth boy" என்றார். 

பொய் சொல்லலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால், அந்த நேரம் பார்த்து அர்ஜுன், விஜயகாந்த் படங்களில் இறுதிக் காட்சியில் வரும் உக்கிரமான இசை மனதில் ஒலித்தது. தேவநேய பாவாணரும், மறைமலை அடிகளும் மனதில் முழங்கினார்கள். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று என் குருதி குமுறியது. "Yes Sir." என்று நெஞ்சை நிமிர்த்தி சொன்னேன். ஒரு முறை என்னை மேலும் கீழும் பார்த்தார். பழைய எம்.ஜி.ஆர் படங்களில் வருவது மாதிரி என் தோளில் கை வைத்து "Well Done. Sarangan. I appreciate your honesty"ன்னு சொல்லுவார் என்று நினைத்தேன். வந்தது என்னமோ அப்படிதான் வந்தார். "Very good"ன்னு சொன்னார். ஆஹா!!! நம்மள பாராட்ட போறார்ன்னு நினைச்சேன்.  "நீங்க பொய் சொல்லி இருந்தா நடு கிரௌண்டுல முட்டிங்கால் போட வெச்சிருப்பேன். ஆனா, நீங்க உண்மைய சொன்னதால் மரத்தடியில் முட்டிங்கால் போடுங்க"ன்னு சொல்லிட்டார். அன்னிக்கு சிவராஜ், செந்தில் கிட்ட அடி வாங்காம தப்பிச்சதே பெரிய சாதனைதான். 

இப்படி எத்தனயோ தர்ம சங்கடங்களை தாண்டி இத்தனை வருடங்களாக என் வாசிப்பு தொடர்ந்தது. எங்கு போனாலும் என் புத்தகங்கள் என்னோடு வந்தன. இத்தனை வருடம் கழித்து விதி விளையாடியது. கிட்டத்தட்ட, ஒரு லட்சம் செலவு செய்து சேகரித்த என் புத்தகங்களை பார்த்து என் மனைவி சொன்னாள்: 

"ஏங்க!!! நம்ம அடுத்த வீடு மாறும் போது, இந்த குப்பயெல்லாம் தூக்கி போட்டுருவோம். சும்மா இதுகள படிச்சி நேரத்த waste பண்றத விட்டிட்டு எதாவது உருப்படியா பண்ணுங்க"

Wednesday, February 20, 2013

விஸ்வரூபம் - சற்று தாமதமான ஒரு பார்வை


ஒரு வழியாக கமலின் விஸ்வரூபம் படம் வெளி வந்து நல்ல வெற்றி அடைந்து விட்டது. அது தொடர்பாக நடந்த பிரச்சனையின் போதுதான் பலரின் மனதில் உள்ள சாக்கடைகள் சந்திக்கு வந்தது. ஒரு நடிகனுக்காக தமிழ் ரசிகன் வாழும் வீட்டின் பத்திரத்தை கூட அனுப்பும் அளவுக்கு வெறி பிடித்தவனாக இருக்கிறான் போன்ற சில விசயங்களும் வெளி வந்தது. நல்லது. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். இந்த பிரச்னையில் ஒரு விஷயம் என்னை உறுத்துகிறது. "கமல் ஆப்கானிஸ்தானில் உள்ள முஸ்லிம்களை பற்றிதானே படம் எடுத்தார். இதற்காக, இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் ஏன் இவ்வளவு கோபப்படுகிறார்கள்? இந்துக்களை வில்லனாக காட்டினால் நாங்கள் என்ன கோபப்படுகிறோமா?" என்று சில நண்பர்கள் பதிவிடுகிறார்கள். இது எனக்கு சரி என்று தோன்றவில்லை.

கலாச்சார ரீதியாக, இந்து சமயமும் இஸ்லாமிய சமயமும் மிகவும் மாறுபட்டவை. ஒன்றை ஒன்று ஒப்பிடுதல் முட்டாள்தனம். ஒப்பிட வேண்டும் என்றால் இஸ்லாமிய சமயத்தோடு நான் யூத சமயத்தை ஒப்பிடுவேன். எவ்வாறு யூதர்கள் எந்த நாட்டினராக இருந்தாலும் தங்கள் சமயத்தால் ஒன்று பட்டு நிற்கின்றார்களோ அதை போலவே இஸ்லாமிய சமயத்தினரும், சமயத்தின் அடிப்படையில் நட்புறவோடு உள்ளனர். யூதர்கள் நாட்டின் எல்லை கடந்து ஒன்று பட்டு இருப்பதால் தான் இன்றும் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உதவியாக உள்ளது [இதுவும் ஒரு காரணம்] . இவ்வாறு தேசிய எல்லைகளை கடந்து சமயத்தின் அடிப்படையில் ஒரு குழு ஒன்றுபடுதல் தவறா? அது அந்த தேசத்திற்கு செய்யும் துரோகம் இல்லையா? என்று சிலர் கேட்கலாம். உண்மையில், விஸ்வரூபம் பட பிரச்சனையின் போது, பலர் இதே கேள்விகளை கேட்டார்கள். கேட்டதோடு இல்லாமல் மேலும் "தமிழக இஸ்லாமியர்களுக்கு ஆப்கான் இஸ்லாமியர்கள் மேல் பாசம் என்றால், அவர்கள் இந்த நாட்டின் துரோகிகள். அவர்கள் தாராளமாக பாகிஸ்தானுக்கோ, ஆப்கானிஸ்தானுக்கோ செல்லலாம்" என்றார்கள். என் அளவில், இது ஒரு அபத்தமான வாதம்.

தேசிய எல்லைகளை தாண்டி சமயத்தின் அடிப்படையில் ஒன்றுபடுவது தவறு அல்ல. இந்த இடத்தில், நாம் இன்னொரு விசயத்தை நினைவில் கொள்ள வேண்டும். யூத சமயத்தை போலவே, இஸ்லாமியர்களுக்கும் அவர்களின் சமயம் ஆன்மிகம், இறை பக்தி போன்றதை தாண்டி அவர்களது வாழ்வியல் முறையாகவும், கலாசார வழிகாட்டியாகவும் உள்ளது. அதன் அடிப்படையில், அம்மக்கள் ஒன்றுபடுவது தவறு என்று சொல்வதற்கு அடுத்தவருக்கு என்ன உரிமை இருக்க முடியும்? இதை தவறு என்று சொன்னால், இந்திய தேசிய எல்லையை தாண்டி, மொழியின் அடிப்படையில், தமிழீழ மக்களையும், விடுதலை புலிகளையும் ஆதரிக்கும் தமிழர்கள் செய்வது சரியா? தவறா? அதை போல, இஸ்லாமிய மக்கள் இவ்வாறு சமயத்தின் அடிப்படையில் ஒன்றுபடுவது, இது முதல் தடவையும் அல்ல. இந்திய சுதந்திரத்திற்கு முன்னரே, துருக்கி நாட்டில் நடந்த அரசியல் மாற்றங்களை தொடர்ந்து தொடங்கிய 'கிலாபட்' இயக்கம் பின்னர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியோடு இணைந்து சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றது வரலாறு.

மேலும், "கமல் இந்த படத்தில் அப்படி என்ன தப்பா காட்டினார்? உண்மையதான காட்டினார்." என்று சிலர் கூறினார்கள். சரியோ-தவறோ, மக்களின் எண்ணங்களை செதுக்கும் வலிமை திரைப்படங்களுக்கு உண்டு. அதை, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ திரைப்படங்கள் செய்து கொண்டுதான் இருக்கின்றன. உலகம் முழுக்க இது பரவலாக காணப்படுகிறது. ஒரு சிறு உதாரணம், 1977-இல் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் "Close Encounters with the Third Kind" படம் வெளியானவுடன், வெளியுலக மனிதர்களை பார்த்தோம் என்று அதிக அளவில் மக்கள் கூற ஆரம்பித்தார்கள். நம் ஊரிலேயே, பல தமிழ் படங்களை பார்த்து நதியா உடை, குஷ்பூ இட்லி என்று கொண்டாடிய மக்கள்தானே நாம். இதெல்லாம் என்ன பிரச்சார படங்களா? வெறும் வியாபார படங்கள். ஆனால், இந்த வியாபார படங்களின் விளைவு, பிரச்சார படங்களின் விளைவை உண்டு பண்ணியது. அது போல, கமல் எடுத்தது வெறும் வியாபார படம்தான். ஆனால், அதன் விளைவு, இஸ்லாமிய மக்களை பற்றி எதிர் மறையான பல்வேறு கருத்துக்களை உருவாக்குவதாகவே உள்ளது.

ஒரு பழைய விஞ்ஞான ஆராய்ச்சி. இதை படிக்கும் பலர் ஏற்கனவே கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஒரு எலிக்கு பசி எடுக்கும் போதேல்லாம், உணவு கொடுக்கும் பொழுது அதற்கு மின்சாரம் மூலம் காம உணர்வையும் தூண்டினர். ஒரு கட்டத்திற்கு பிறகு, அந்த எலிக்கு உணவு கொடுத்தால் போதும். தன்னாலே காம உணர்வு உண்டாகி விடும். இந்த முறையை, தற்பொழுது உலகில் பல சுய முன்னேற்ற இயக்கங்கள் உபயோகிக்கின்றன. அதை போலத்தான், நம் திரைபடங்கள். தீவிரவாதம் அல்லது வேறு எதாவது ஒரு தவறான காரியம் நடக்கும் போதோ இஸ்லாமியர்களையும், அவர்களின் கலாச்சார அடையாளங்களையும் காட்டுகின்றன. இது மட்டும் அல்ல. பொதுவாகவே இஸ்லாமிய மக்களை காட்டும் பொழுது அவர்களை தவறாகவும், படிப்பறிவு இல்லாதவர்களாகவும் நம் திரைப்படங்கள் காட்டும். அதுவும், நாத்திகவாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவன் என்று சொல்லிக் கொள்ளும் கமலின் படங்களில் இது மிகவும் அதிகம்.
சில உதாரணங்கள்:

1. 'ஹே ராம்' படத்தில், இந்துக்கள் பாவம். பழைய சுத்தியலையும், அரிவாளையும் வைத்துக் கொண்டு அலைவார்கள். ஆனால், இஸ்லாமியர்கள் படு பயங்கரம். அப்பொழுதே, 1948-இல் ஒரு துப்பாக்கி கிடங்கில் குடியிருப்பார்கள். அதுவும், அவர்கள் மனைவி குழந்தைகளோடு. இதிலிருந்து, கமல் என்ன சொல்ல வருகிறார்? இஸ்லாமிய ஆண்கள் மட்டும் அல்ல. பெண்கள் கூட வன்முறை வாழ்க்கை வாழ்பவர்கள்தான். அதை எதிர்ப்பவர்கள் அல்ல என்றா?

2. அதே படத்தில், கல்கத்தா கலவரங்களின் பொழுது, இந்து மதத்தை சேர்ந்தவர்கள் இஸ்லாமியர்களை கொல்வது ஒரு பின்னணி காட்சியாக அல்லது வெறும் வசனமாக ('Good Hunting!') மட்டுமே  பதிவு செய்யப்பட்டிருக்கும். மேலும், எந்த இந்து மதத்தை சேர்ந்த இரவுடிக்கும் பெயர் இருக்காது. ஆனால், இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த இரவுடிகள் பெண்ணை பலாத்காரம் செய்யும் பொழுது, அது மிக தெளிவாக வெகு நேரம் காட்டப்படும். அதோடு, அவர்களில் பிரதானமான இரவுடிக்கு பெயர் வைத்து, நம் மனதில் இஸ்லாமிய சமயத்தையும் அந்த வன்கலவியையும் பார்ப்பவர் மனதில் மிக அழகாக பதிவு செய்யும் வேலையை கமல் செய்திருப்பார்.

3. அதே படத்தில், கமல் இந்து கும்பலிடமிருந்து ஒரு இஸ்லாமிய பெண்ணை காப்பாற்றுவார். அதனால், அவருக்கு வீட்டிற்கு செல்ல தாமதமாகும். அதற்குள், இஸ்லாமிய இரவுடிகள் கமலின் மனைவியை வன்கலவி செய்திருப்பார்கள். பின்னால், ஒரு வசனம் வேறு வரும். "அடேய்! எத்தனை தடவை என்னிடம் வாங்கி சாப்பிட்டு இருக்கே" அதாவது, ஒரு இந்து இஸ்லாமியனுக்கு உதவினாலும்,சோறு போட்டாலும் அவன் அதை மறந்து இந்துவுக்கு துரோகம் செய்வான். அவன் மனைவியை வன்கலவி செய்வான். ஆஹா!!!! கமல் சார்!!! இது எந்த வகையான மத சார்ப்பின்மை என்று கொஞ்சம் சொல்லுங்கள்.

4. பின், 'உன்னை போல் ஒருவன்' படம். அதில், தீவிரவாதிகளுடன் ஒரு இஸ்லாமிய சமயத்தை சேர்ந்த அதிகாரி போகின்றார் என்று மோகன் லால் சொல்வார். அந்த இடத்தில், கமல் ஒரு கணம் ஒரு சிறிய அமைதி காப்பார். அந்த அமைதிக்கு பின்னால் ஒளிந்திருக்கும் அரசியலை கமல் விளக்கட்டும்.

5. அதற்கு பிறகு, தசாவதாரம் படம். இந்த படம்தான் உச்ச கட்ட கொடுமை. இந்த படத்தில் வரும் இஸ்லாமிய குடும்பம் ஐயோ பாவம். அளவுக்கு அதிகமாக பிள்ளைகள் பெற்று வறுமையில் இருக்கும், அளவுக்கு அதிகமான உயரமுடைய ஒரு கோமாளியை கொண்டிருக்கும் ஒரு குடும்பம். அதுவும், அவர்கள் பேசும் தமிழ். பல வருடங்கள், பழனியிலும்-மதுரையிலும்-சென்னையிலும் இருந்திருக்கிறேன். இந்த படத்தில் காட்டுவது போல, மட்டமான தமிழ் பேசி, ஆப்கானியர் போல் உடை அணிந்து நடமாடும் ஒரு இஸ்லாமிய குடும்பத்தை நான் பார்த்தது இல்லை. ஏன் இந்த கொலை வெறி?

6.இதே படத்தில், தலித்தாக வரும் பூவராகன் கதாபாத்திரம். அது எப்படி? மற்ற அனைவரும் மிக வெள்ளையாக, நாகரீக தோற்றத்துடன் வரும் பொழுது, இந்த தலித் கதாபாத்திரம் மட்டும் அருவருக்கத்தக்க ஒரு தோற்றத்தில் வரும். அதோடு, இறுதியில் வில்லனை தவிர அனைவரும் பிழைத்து விடுவார்கள். இந்த தலித் கதாபாத்திரத்தை தவிர. ஏன்? ஏனென்றால், பூவராகன் தன்னை அழிக்க நினைத்த ஒரு மேட்டுக்குடி அரசியல்வாதியின் பையனை காப்பாற்றி அதில் இறந்து விடுவார். ஆக, தலித் மக்கள் காலம் காலமாக மேட்டுக்குடி மக்களுக்கு உபகாரம் செய்து உயிர் விட வேண்டும். என்னங்க நியாயம்?

7. பின், இந்த விஸ்வரூபம் படம். பல இடங்களில் இஸ்லாமிய ஆன்மீக மற்றும் கலாசார குறியீடுகள். இதை, பல இடங்களில் உண்மையிலேயே தலிபான் தீவிரவாதிகள் பயன்படுத்துகிறார்கள் என்பது உண்மையே. ஆனால், அதை திரைப்படம் என்னும் வலிமையான ஊடகத்தில் காட்டி தீவிரவாதிகளையும் மீறி இஸ்லாமியர்களை அதனுடன் தொடர்ப்பு படுத்தி பொது புத்தியில் இஸ்லாமிய சமயத்தையும் தீவிரவாதத்தையும் பொது புத்திக்கு சம்பந்தபடுத்திவிட்டது.
[கமலே இஸ்லாமியனாக வருகிறார் என்ற வாதமெல்லாம் சும்மா உல்லு...லாய்....]

8. குறிப்பாக, கொலை செய்யும் பொழுது வரும் குரான் வாசகங்கள், குரான் இசை, தொழுகை இதெல்லாம் எலிக்கு மின்சாரம் மூலம் காம உணர்வை தூண்டுவது போல. இப்படியே விட்டால், ஒரு கட்டத்தில் மின்சாரம் தேவை இல்லை. பொது மனதில் தன்னால் பதிந்து விடும். தலிபான் தீவிரவாதிகள் இப்படி செய்தாலும், அதை காட்டி இருக்க வேண்டாம்.

இதை தவிர, "அமெரிக்க ராணுவம் செய்த தவறுகளை காட்டவில்லை", "அமெரிக்க ராணுவம் நல்ல ராணுவம் அல்ல" என்றெல்லாம் சொல்லி இந்த படத்தை எதிர்ப்பது சரி அல்ல. அது அவரின் கருத்து. காட்டுகிறார். [உண்மையில், என் கருத்தும் அதுதான். அமெரிக்க ராணுவம் முடிந்த அளவு பெண்களையும் குழந்தைகளையும் ஒன்றும் செய்யாது. தவிர்க்க முடியாத விதி விலக்குகள் தவிர....]

கமலின் படங்கள் மட்டும் அல்ல. பலருடைய படங்களில், இஸ்லாமியர்களை இப்படிதான் அசிங்கபடுத்தி இருக்கிறார்கள். 'வாரணம் ஆயிரம்', 'சிவாஜி', எண்ணற்ற விஜயகாந்த் படங்கள். இப்படி தொடர்ந்து ஒரு சமூகத்தை திரைப்படத்தில் அசிங்கப்படுத்தி இருக்கிறார்கள். இவ்வளவு செய்து விட்டு, கருத்து சுதந்திரத்தை அனுமதிக்க வேண்டும் என்றால் என்ன நியாயம் என்று புரியவில்லை?

இங்கே, இன்னொரு விசயமும் சொல்ல வேண்டும். இந்த சமயத்தில் சில இஸ்லாமிய சகோதரர்கள் பேசியதும் மிக தவறு. கமலையும் குடும்பத்தை இழுத்தது மிகவும் தவறு. இவ்வாறெல்லாம், பேசி இந்த படம் ஏற்படுத்தும் நேர் மறையான கருத்துக்களை விட, மக்களிடம் அதிகமாக இஸ்லாமிய எதிர்ப்பு கருத்துக்களை உருவாக்கி விட்டார்கள். பார்த்து பேசி இருக்கலாம்.....

இதையெல்லாம் தாண்டி, இந்த படத்தில் தொழில்நுட்பம் அபாரம். பல தொழில் நுட்ப முன்னேற்றங்களை தமிழ் சினிமாவிற்கு கொண்டு வந்த பெருமை கமலை சாரும், அற்புதமான இசை, 'உன்னை காணாத நானும்" பாடலை இதுவரை பல தடவை கண்ணில் தண்ணீர் வரும் வரை பார்த்தும் கேட்டும் விட்டேன். கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்லும் ஒருவருக்கு [மதமும் சாதியும் கூட இல்லை என்றுதான் சொல்கிறார்..:-)] எப்படி இப்படி பாடல் எழுத முடிகிறதோ? அற்புதமான பாடல் - ஆடல். அதுவும், நளினமான கமல் மூர்க்கமான கமலாக மாறும் பொழுது, ரஜினி சார் - ஹீரோயிசம் என்றால் என்ன என்று இதை பார்த்து கற்று கொள்ளுங்கள். நக்கல் நய்யண்டியாக வரும் வசனங்கள் அனைத்தும் கமலின் Trademark.

இப்படி பல விஷயங்கள் புகழும் படி இருந்தாலும் இஸ்லாமிய சமயத்தை காட்டிய விதத்தில் மட்டும் கோட்டை விட்டு இருக்கிறார். என்றாலும், இந்த பிரச்சினை நல்லதற்கே பயன்பட்டது. இலவச விளம்பரம். முன்னை விட அதிகமான வசூல். முதலில் சொன்னதைதான் இப்பொழுதும் சொல்கிறேன்: நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.....

சுவாமியே சரணம் ஐயப்பா!!!! இயேசு நம்மை காப்பாராக!!!! அல்லாஹு அக்பர்!!!! புத்தம் சரணம் கச்சாமி!!!!!


Friday, March 16, 2012

நொந்து நூலயிடுவோம்....வெந்து noodles-ஆ ஆயிடுவோம்.......


கத்தாரில் இருக்கும் என் நண்பருக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயமானது. நிச்சயதார்த்தத்திற்கு ஒரு வாரம் முன்பும், பின்பும் அவருடன் தொலைபேசியில் பேசினேன். நாங்கள் பேசியதோட தொகுப்பு கீழே:

நிச்சயதார்த்தத்திற்கு ஒரு வாரம் முன்பு......

நான்: "என்னடா மாப்பிள்ளை..... அடுத்த வாரம் கல்யாணம் நிச்சயம். இனிமே, கல்யாணம் வரைக்கும் இந்தியாவுல புள்ளையோட ஒரே கடலைத்தான...."

நண்பன்: "சீ...சீ... அதெல்லாம் தப்புடா. கல்யாணத்துக்கு முன்னாடி பொண்ணுகிட்ட பேசுறது ரொம்ப தப்பு."

நான்: "இது என்னடா சின்ன புள்ளத்தனமா இருக்கு. பேசுனா என்னா, குடியா முழுகிடும்."

நண்பன்: "அதெல்லாம் தப்புடா. உனக்கு தெரியுமா. Bible-ல என்ன சொல்லி இருக்குன்னா, வார்த்தைதான்...."

நான்: "டேய்..போதும். [மனசுக்குள்] இதெல்லாம் உருப்படறதா?.......

நிச்சயதார்த்தம் முடிந்து ஒரு வாரம் கழித்து....

நான்: "என்னடா மாப்பிள்ளை..... இப்பெல்லாம் கூப்பிடவே மாட்டேங்குற... வேலை ஜாஸ்தியா?"

நண்பன்: "இல்லை..மச்சான். கொஞ்சம் பிஸி. புள்ளைகிட்ட டெய்லி பேச வேண்டி இருக்குல்ல...."

நான்: "வாடா.. சத்திய புத்திரா. அன்னிக்கு என்னமோ, வார்த்தை முக்கியம். Bible-ல சொல்லி இருக்குன்னு ஏகத்துக்கு பேசுன...

நண்பன்: "கரெக்ட் மச்சி... ஆனா அதே Bible-ல என்ன சொல்லி இருக்குன்னா...."

நான்: "நீ பண்ணுற நொன்ன மயிருக்கெல்லாம் Bible-ல இழுக்க சொல்லி இருக்கா?"

நண்பன்: "அப்புடி இல்ல மச்சான். சரி அத விடு. என்ன பார்த்து அவ என்ன சொன்னா தெரியுமா?"

நான்: "என்ன சொல்லி இருப்பா. போன ஜென்ம பாவத்த, இந்த ஜென்மத்தில அனுபவிக்க போறேன்னு சொன்னாளா?"

நண்பன்: "நான் ரொம்ப அழகா இருக்கேன்னு சொன்னாடா."

நான்: ‍‍‌"சரி. ஒரு ஆறுதலுக்கு சொல்லி இருப்பா. இதுக்கெல்லாம் feelings காட்டாத...."

நண்பன்: "அட, போடா. கூட வெச்சிக்க என்னோட photo வாங்கிட்டு போய் இருக்கா."

நான்: "அப்புறம்..."

நண்பன்: "என்னைய மாமா, மாமான்னு தான் சொல்றா... "

நான்: "அத விடு. ஒரு நாளைக்கு பிச்சைக்காரன் கூடத்தான் உன்ன நூறு தடவ தர்ம பிரபுன்னு சொல்றான். அதுக்காக, பீல் பண்றோமா. அப்புறம், வேலையெல்லாம் எப்பிடி போகுது."

நண்பன்: "டெய்லி தூங்கறதுக்கு முன்னாடி என்கிட்டே பேசிட்டுதான் தூங்கன்னுமாம்..."

நான்: "நான் கூட டெய்லி தூங்கறதுக்கு முன்னாடி ஒண்ணுக்கு போயிட்டுதான் தூங்குவேன். இப்போ அது ரொம்ப முக்கியமா?"

நண்பன்:  "என்னடா இப்பிடி பேசிட்ட..."

நான்: "பின்ன எப்புடி பேசுவாங்க? நான் என்ன கேட்டேன் - நீ ஒரு தனி' trackl-ல பேசிக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம்?"

நண்பன்: "சரி விடு. வேலை நல்லா போகுது."

நான்: "சரி.. அப்புறம்...."

நண்பன்: "அவ என்னைய டெய்லி கூப்பிட்டு....."

நான்: "டேய்....போதும். [மனசுக்குள்] இதெல்லாம் உருப்படறதா?..."

இதனால் அறியப்படும் நீதி: ['நண்பன்' பட ஸ்டைல்ல படிங்க...]

1. நமக்கு figure கிடைக்காட்டியும், figure set ஆக போற நம்ம நண்பன் - வாழ்க்கைய அனுபவிக்க தெரியாம பழம் மாதிரி பேசுனா, நொந்து நூலயிடுவோம்.

2. நமக்கு figure கிடைக்காதப்போ, பழம் மாதிரி பேசுன அதே நண்பன் - figure set ஆனதுக்கு அப்புறம் வாழ்க்கைய முழுசா அனுபவிச்சா, வெந்து noodles-ஆ ஆயிடுவோம்....... :-)

Friday, August 26, 2011

ஆதலினால், காதல் செய்வீர்இரண்டு வருடத்திற்கு முன்னால், ஒரு பொறியியல் கல்லூரி மாணவன் காதலிக்குறேன் என்று சொன்னால் "போடா.. போய் படிக்குற வழிய பாரு"ன்னு சொல்லி இருப்பேன். இன்று, மிகவும் சந்தேகம்... எப்படியும், அவன்' படிக்கும் Electrical Engineering, Electronics Engineering, Instrumentation and Control Systems, Engineering Drawing, Carpentry, Lathe, Digital Systems, Engineering Chemistry, Engineering Physics போன்ற பாடங்கள் பின்னால் பத்து பைசாவுக்கு உபயோகப்படும் என்று தோன்றவில்லை. எப்படியும், முக்கால்வாசி மாணவர்கள் TCS, CTS, HCL, Wipro, Infosys, IBM services, HP Services, Satyam, Accenture போன்ற நிறுவனங்களில் ஜல்லி அடிக்க போகிறார்கள். இந்த நிறுவனத்தில் ஜல்லி அடிக்க மேலே குறிப்பிட்ட ஒரு பாடம் கூட அவசியம் இல்லை. என்ன தேவை? கொஞ்சம் நுனி நாக்கு ஆங்கிலம், கொஞ்சம் கணிப்பொறி அறிவு, எந்த நிலையையும் சமாளிக்கும் திறமை, நிறைய அரசியல்... இதுக்கு எதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டு படிக்கணும்? ஒழுங்கா காதல் பண்ற வேலைய பார்க்கலாம்.

பெத்தவங்க பார்த்து கல்யாணம் பண்றதுல நிறைய சிரமம். முக்கியமா, ஜோசியக்காரன். முக்கி முக்கி படிச்சு, பரீட்சை எழுதி, வேலை வாங்கி, தேவையான அளவு அரசியல் பண்ணி, onsite வந்து, வேலை பார்க்குற மாதிரி நடிச்சு, இந்த பக்கம் வேலைய வாங்கி அந்த பக்கம் offshore கிட்ட கொடுத்து அவன ஒரு கத்து கத்தி, அவன்கிட்ட வேலைய வாங்கி நம்மளே செஞ்சு கிழிச்ச மாதிரி ஒரு scena போட்டு, இரண்டு வாரத்துக்கு ஒரு தடவ சம்பளம் வாங்கி, டாலர் டாலரா கணக்கு போட்டு செலவு பண்ணி வாழ்கையில் settle ஆகணும்ன்னு முயற்சி பண்ணா, பத்தாவதோட படிப்ப நிறுத்திட்டு, கொஞ்ச வருசம் ஊர சுத்திட்டு, அப்புறம் ஒரு போர்ட மாட்டிக்கிட்டு ஜோசியம் பார்க்க உட்காறவன் கால்ல விழ சொல்லுவாங்க. சரி, பரவாயில்லைன்னு அவன்கிட்ட போய் கேட்டா: "2,4,6,8,10,12 கட்டத்துல சனி இருக்க கூடாது. 3,5,7,9,11 கட்டத்துல இருந்தா அதுக்கு நேர் பார்வையில செவ்வாயும் புதனும் இருக்க கூடாது. 8, 10 ல குரு இருக்க கூடாது. அவரு இவற சைட்டு அடிக்க கூடாது. இவரு அவர சைட்டு அடிக்க கூடாது." இப்பிடி ஆயிரம் ரூல்ஸ் பேசுவாங்க. ஏன்டா? மொத்தமா இருக்கறது 12 கட்டம். இதுல ஏன்டா ஏன் உயிரை வாங்குறீங்க. ஒருவேளை, நம்மள விட நல்லா இருக்காங்களேன்னு கடுப்புல இப்பிடி பண்றாங்களா? யாரவது, ஜோசியகாரங்க மனநிலைய பத்தி ஆய்வு கட்டுரை எழுதி Phd பண்ணலாம்.

அதுலயும், இப்போ பொண்ணு தேடுற விதமே மாறிடுச்சு. முன்னர் மாதிரி Hindu-வில் விளம்பரம் கொடுக்க வேண்டாம். ஏராளமான வலை மனைகள் வந்தாச்சு. இன்ன மதத்தில், இன்ன சாதியில், இன்ன உட்பிரிவில், இன்ன கிளை பிரிவில் பெண் வேண்டும் என்று கேட்க முடியும். அவனவன் மூளைய கசக்கி கணிபொறிய கண்டுபிடிச்சு, இணையத்தை கண்டுபிடிச்சு அடுத்து என்ன பண்ணலாமுன்னு யோசிக்குறப்போ, சாதி வாரியா துணை தேட அத உபயோகபடுத்துற மூளை இந்தியனுக்கு மட்டும்தான் வரும். இதுல இன்னொரு விஷயம் கவனிக்கணும். அதிகம் படிச்சவங்ககூட, இதுல குறிப்பா இருக்குறது. ஒரு குடும்பம் எழுதி இருக்கு "கம்மா நாயுடு மட்டும். மற்ற நாயுடுகள் வேண்டாம்". இந்த குடும்பத்தின் தலைவர் ஒரு பல்கலைகழகத்தின் உயர் பொறுப்பில் இருப்பவர். குடும்ப தலைவி ஒரு ஆசிரியர். பெண் மேலே சொன்ன ஒரு நிறுவனத்தில் ஜல்லி அடிப்பவர். படிப்பின் மூலம் சாதியை ஒழித்து விடலாம் என்று இனி யாராவது சொன்னால் கட்டை எடுத்து அடிப்பேன். படிப்போ, பதவியோ, வேலையோ சாதியை ஒழிக்காது...

அடுத்து, பெண்கள் கொடுக்கும் requirements. இதுவரை எத்தனையோ client நிறுவனங்களில் இருந்து ஏராளமான requirements வாங்கி இருக்கிறேன். ஆனால், இவர்கள் கேட்பது மாதிரி மண்டையை சொரிய வைத்த தேவைகள் எதுவும் இல்லை. ஒரு பெண்:

"My future husband must be Slim & Athletic"

என்று கேட்டு இருக்கிறார். இன்னொரு பெண்:

"I go shopping a lot. He must be able to spend a lot and get me everything I want"

என்று இன்னொருவர். உண்மையில், இதை எல்லாம் பார்த்து தலையில் அடித்து கொண்டேன். "Slim & Athletic" - புருசனும் பொண்டாட்டியும் என்ன ஒலிம்பிக்ஸ்ல ஓட போறாங்களா? தேவையான எல்லாத்தையும் வாங்கி கொடுக்கறதுன்னா, LIC இல் இரண்டு மாடியும், ஒரு நாலு ஏரோபிளேனும் வாங்கி கொடுக்கலாமா?

இது எல்லாத்தையும் விட கொடுமை. ஒரு பெண்ணிடம் நேரில் பேசினேன். அப்போ அவங்க கேட்டாங்க: "What is your future plan?" அந்த பெண்ணிடம் பேசும் பொழுது நேரம் மாலை 7:30. "இனிமே போய் சமைச்சு சாப்பிட முடியாது. போற வழியில் உடுப்பியில் ஒரு ரச வடையும் மசால் தோசையும் சாப்பிட்டு வீட்டுக்கு போகலாம்"ன்னு யோசித்தேன். சத்தியமா எனக்கு அப்போ இருந்த ஒரே future plan அது மட்டும்தான். இத அப்புடியே சொல்ல முடியுமா? அப்படி எல்லாம் ஒன்னும் இல்லீங்கன்னு தலைய சொரிந்தேன். அட ஆண்டவா.....

சரி, இந்த கொடுமைய எல்லாம் தாண்டி ஒரு பொண்ண பார்த்தா, கடைசியில சொல்லுவாங்க. அந்த சம்பந்தம் வேணாம். ஏன்? அவங்க சொந்தக்காரங்க சரியில்லை. என்ன பிரச்சனை? அந்த பொண்ணோட சித்தியோட மச்சினனோட மாமனோரோட ஒன்னு விட்ட சித்தப்பா பையன்.... நான் கேட்பதை நிறுத்தி ஒரு பத்து நிமிஷம் இருக்கும்.....

சொல்லுங்க.. இவ்வளவு பிரச்சனை தேவையா? அநேகமா, இந்த பிரச்சனை எல்லாம் வராம இருக்க சுமாரான வழி, பேசாம படிக்குற காலத்துலேயே காதலிக்கணும். (கல்லூரிக்கு வெளிய வர்றதுக்குள்ள பாதி பேரு commit ஆயிடுவாங்க). அதனால, நான் என்ன சொல்ல வரேன்னா:

"ஆதலினால், காதல் செய்வீர்"